சிட்னி: ஆஸ்திரேலியாவின் தென்கிழக்குப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ளத்திலிருந்து மீண்டு வருவது பெரும் சவாலாக இருக்கும் என்று அந்நாட்டின் பிரதமர் ஆண்டனி அல்பனிஸ் மே 27ஆம் தேதி கூறினார்.
ஆஸ்திரேலியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான நியூ சவுத் வேல்ஸின் ஹண்டர் மற்றும் மிட் நார்த் கோஸ்ட் (மத்திய வடக்குப்) பகுதிகளில் உள்ள பல சிறு நகரங்களில் மூன்று நாள்களாக இடைவிடாத மழையால் ஆறுகளின் நீர்மட்டம் உயர்ந்தது. இதையடுத்து 50,000க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டனர் என்றார் அவர்.
“இதிலிருந்து மீண்டு வர சிறிது காலம் ஆகும், ஆனால் ஆஸ்திரேலியர்கள் மீண்டு வரக்கூடிய ஆற்றல் உள்ளவர்கள்,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
மே 20ஆம் தேதியிலிருந்து தொடர்ந்து நான்கு நாள்களாகப் பெய்த மழையால் டாரியில் 600 மிமீக்கு மேல் மழை பதிவானது. இது, அதன் ஆண்டு சராசரியில் பாதி என்று அதிகாரப்பூர்வ தரவுகள் காட்டுகின்றன.
“ பால் பண்ணைத் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது”, என்று குறிப்பிட்ட திரு அல்பனிஸ், இது, ஆஸ்திரேலியா முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தும்.” என்றார்.
கடந்த வாரம், ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தை வெள்ளம் புரட்டி எடுத்தது.
வெள்ளம் ஏற்பட்ட இடங்களைச் சேர்ந்தவர்கள் மிகக் கடுமையாகப் பாதிப்படைந்தனர்.
பாதிக்கப்பட்ட கிராமப் பகுதிகளுக்கு இட்டுச் செல்லும் சாலைகள் துண்டிக்கப்பட்டன.
தொடர்புடைய செய்திகள்
ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.
இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு பசியால் வாடும் ஆஸ்திரேலியர்களுக்கு மெல்பர்னைச் சேர்ந்த சீக்கிய அறநிறுவனம் உணவு வழங்கியுள்ளது.
பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அறநிறுவனத்தின் தொண்டூழியர்கள் நேரில் சென்று அங்குள்ள கடைத்தொகுதியின் வாகன நிறுத்துமிடத்தில் தற்காலிகச் சமையலறை ஒன்றை அமைத்து உணவு சமைத்து சுடச்சுடப் பரிமாறினர்.
தொண்டூழியர்கள் தயாரித்த பாஸ்டா, சோறு, காய்கறிக் குழம்பு, தேநீர் போன்றவற்றை அங்குள்ள மக்கள் உண்டு மகிழ்ந்தனர்.
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் கடலோரப் பகுதியில் 50,000க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தால் பாதிப்படைந்தனர்.
ஐந்து பேர் மாண்டனர்.
இந்நிலையில், கடந்த மூன்று நாள்களில் உணவு சமைத்து கிட்டத்தட்ட 3,000 பேரின் பசியை ஆற்றியுள்ளது ஆஸ்திரேலிய சீக்கியத் தொண்டூழியர்கள் அறநிறுவனம்.
2017ஆம் ஆண்டிலிருந்து ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீ, வெள்ளம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டோருக்கு இந்த அறநிறுவனம் இலவச உணவு வழங்கி வருகிறது.

