கோலாலம்பூர்: மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் தமக்கு விதிக்கப்பட்ட 50 மில்லியன் ரிங்கிட் (S$15.7 மில்லியன்) அபராதத்தைச் செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவர் தமது எஞ்சிய சிறைத்தண்டனையை வீட்டுக்காவலில் கழிக்க அது வழிவகுக்கும்.
பெக்கான் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான நஜிப்பின் பிரதிநிதிகள் மூலம், அந்தத் தொகை செலுத்தப்படும் என்று பெயர் வெளியிடப்படாத வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இருப்பினும், நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த நஜிப்பின் வழக்கறிஞர்களில் ஒருவரான முகம்மது ஃபர்ஹான் முகம்மது ஷாஃபி, இது தொடர்பாக தற்காப்புத் தரப்பிற்கு இதுவரை எவ்வித வழிகாட்டுதல்களும் வரவில்லை என்று கூறினார்.
‘எஸ்ஆர்சி இன்டர்நேஷனல்’ நிறுவன நிதியிலிருந்து 42 மில்லியன் ரிங்கிட் முறைகேடு செய்யப்பட்ட விவகாரத்தில், சுமத்தப்பட்ட ஏழு குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட நஜிப்பிற்கு, 2020ஆம் ஆண்டு ஜூலையில் உயர் நீதிமன்றம் 12 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 210 மில்லியன் ரிங்கிட் அபராதமும் விதித்தது.
அந்தத் தீர்ப்பும் தண்டனையும் 2021ஆம் ஆண்டு டிசம்பரில் மேல்முறையீட்டு நீதிமன்றத்தாலும், 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் கூட்டரசு நீதிமன்றத்தாலும் மீண்டும் உறுதிசெய்யப்பட்டன.
அதையடுத்து, 2024 ஜனவரி 29ஆம் தேதி நடைபெற்ற மன்னிப்பு வாரியத்தின் 61வது கூட்டத்தில், நஜிப்பின் சிறைத்தண்டனை 12 ஆண்டுகளிலிருந்து ஆறு ஆண்டுகளாகவும் அவருக்கு விதிக்கப்பட்ட அபராதம் 210 மில்லியன் ரிங்கிட்டிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட்டாகவும் குறைக்கப்பட்டது.
மலேசிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், நஜிப் தமது எஞ்சிய சிறைத்தண்டனையை 2028 ஆகஸ்ட் 23ஆம் தேதிவரை வீட்டுக்காவலில் கழிக்க அனுமதிக்கும் நிபந்தனையுடன் கூடிய மன்னிப்பை வழங்கியதாக செப்டம்பர் 18ஆம் தேதி செய்தி வெளியானது. இருப்பினும், நஜிப் அந்த 50 மில்லியன் ரிங்கிட் அபராதத்தைச் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
