ஜெனீவா: சுவிட்சர்லாந்தின் கிரேன்ஸ் மான்டெனா நகரில் ஏற்பட்ட தீ விபத்தில் மாண்டோரின் உடல்களை அடையாளங்காணும் சிரமமான பணியை அதிகாரிகள் மேற்கொண்டுவருகின்றனர்.
தீ விபத்தில் சிக்கியோரின் உடல்கள் மோசமாக கருகியிருப்பதால் அவர்களை அடையாளங்காண பல நாள்கள் எடுக்கக்கூடும் என்று சுவிட்சர்லாந்து அதிகாரிகள் தெரிவித்தனர்.
சொகுசு ஆல்பைன் ஸ்கீ விடுதியில் மூண்ட தீயில் ஏறக்குறைய 40 பேர் உயிரிழந்தனர், 115 பேர் படுகாயமடைந்தனர். அவர்களில் பலரின் உடல்நிலை மோசமாக உள்ளது.
அதிகாரிகளின் தற்போதைய தலையாய கடமை மாண்டோர் உடல்களின் பெயர்களைக் கண்டறிவது என்று கிரேன்ஸ் மான்டேனா மேயர் நிக்கலஸ் ஃபெருட் குறிப்பிட்டார். அதற்குப் பல நாள்கள் தேவைப்படும் என்றார் அவர்.
மருத்துவ நிபுணர்கள் பல், மரபணு மாதிரிகளைப் பயன்படுத்தி உடல்களை அடையாளங்காண முயல்கின்றனர்.
எதையும் 100 விழுக்காடு உறுதிப்படுத்தாமல் மாண்டோரின் குடும்பத்திற்குத் தகவல் சொல்ல முடியாது என்று அவர்கள் கூறினர்.
தீக்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. தாக்குதலுக்குப் பதிலாக அது ஒரு விபத்து போல தென்படுவதாக சுவிட்சர்லாந்து அதிகாரிகள் சுட்டினர்.
மெழுகுவத்திகளால் தீ மூண்டிருக்கக்கூடும் என்று தீ விபத்திலிருந்து தப்பித்த சிலர் குறிப்பிட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில் சம்பவ இடத்துக்கு அருகில் மாண்டோருக்கு மக்கள் புத்தாண்டின் முதல் நாளில் மௌன அஞ்சலி செலுத்தினர்.
தீயில் சிக்கிய பெரும்பாலோர் புத்தாண்டை வரவேற்க ஒன்றுகூடிய இளையர்கள் என்று அறியப்படுகிறது. தீ விபத்தில் காணாமற்போன இளையர்கள் குறித்து தகவல் தரும்படி பெற்றோர் பலர் அதிகாரிகளை நெருக்கிவருகின்றனர்.
சம்பவ இடத்திற்கு அருகில், சியோன் என்ற பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு விபத்தில் சிக்கியோர் கொண்டுசெல்லப்பட்டனர். ஏறக்குறைய 60 பேர் அங்கு அனுமதிக்கப்பட்டதாக மருத்துவர்கள் குறிப்பிட்டனர்.
கடுமையான தீக்காயத்துக்கு ஆளாகி அனுமதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, ஸூரிக், லோசானில் உள்ள தீப்புண் சிகிச்சை நிலையங்களின் கொள்ளளவைத் தாண்டிவிட்டதாக அவர்கள் கூறினார்.
ஏறக்குறைய 50 பேர் கடுமையான தீக்காயங்களுக்கு ஆளாகியிருப்பதாக ஜெனீவா பல்கலைக்கழக மருத்துவமனை மருத்துவர் ராபர்ட் லரிபாவ் சொன்னார்.

