ரோம்: இத்தாலியில் 100 வயதைக் கடந்த முதியோர் எண்ணிக்கை கடந்த பத்தாண்டுகளில் 30 விழுக்காடு அதிகரித்துள்ளது.
அந்நாட்டில் குழந்தைப் பிறப்பு விகிதம் தொடர்ந்து சரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இத்தாலியின் தேசியப் புள்ளிவிவரப் பிரிவு வியாழக்கிழமை (நவம்பர் 7) வெளியிட்ட அறிக்கையில், இந்த ஆண்டு 100 வயதுக்கும் 104 வயதுக்கும் இடைப்பட்ட இத்தாலியர்களின் எண்ணிக்கை 22,000க்கும் அதிகம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒப்புநோக்க, 2014ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 17,000ஆகப் பதிவானது.
முதியோரில் 81 விழுக்காட்டினர் பெண்கள் என்று அந்த அறிக்கை கூறுகிறது.
இந்த ஆண்டு 110 அல்லது அதைவிட அதிக வயதானோரின் எண்ணிக்கை 21. அவர்களில் ஒருவர் மட்டுமே ஆண். 2009ஆம் ஆண்டு இத்தகைய பத்துப் பேர் மட்டுமே இருந்ததாகக் கூறப்பட்டது.
இத்தாலியில் மூப்படையும் மக்கள்தொகையால் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. ஓய்வூதியம், சுகாதாரப் பராமரிப்பு ஆகியவற்றுக்காக அரசாங்கம் அதிகம் செலவிட நேரிட்டுள்ளது.
இத்தாலியின் ஆக வயதானவராகக் கருதப்படுபவர் 114 வயதான பெண்மணி ஆவார். ஆண்களில் ஆக முதியவருக்கு வயது 110.

