தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கவலைப்படாதீர், உங்களுக்கு உறுதுணையாக இருப்பேன்; கடற்படை அதிகாரிகளுக்கு உறுதி அளித்த தைவானிய அதிபர்

2 mins read
6f8b5e8c-79ec-48ee-8dc7-e2a1096e6dba
‘செங் ஹோ’ போர்க் கப்பல் கடற்படை அதிகாரிகளுடன் தைவானிய அதிபர் லாய் சிங் டே. - படம்: ராய்ட்டர்ஸ்

தைப்பே: தைவானிய போர்க் கப்பலின் கடற்படை அதிகாரிகளிடம் அந்நாட்டு அதிபர் லாய் சிங் டே செப்டம்பர் 6ஆம் தேதியன்று பேசினார்.

செங் ஹோ என்று பெயரிடப்பட்ட அந்தப் போர்க்கப்பல் தைவானில் கட்டப்பட்டது.

தைவானிய நீரிணையில் உள்ள பெங்ஹு தீவுகளில் இருக்கும் முக்கிய கடற்படை முகாமில் நங்கூரமிடப்பட்டிருந்த அக்கப்பலில் அதிபர் லாய் ஏறி அங்கிருந்த கடற்படை அதிகாரிகளை சந்தித்து ஊக்கமளித்தார்.

“கவலைப்படாதீர்கள். உங்களுக்கு உறுதுணையாக இருப்பேன்,” என்று கடற்படை அதிகாரிகளுக்கு அவர் உறுதி அளித்தார்.

சீனாவுக்கும் தைவானுக்கும் இடையே நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் தைவானின் இறையாண்மையைக் காக்க தீவிரமாகச் செயல்பட்டு வரும் கடற்படை அதிகாரிகளுக்கு அவர் நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.

தைவானைத் தனது ஒரு பகுதியாகச் சீனா கருதுகிறது.

ஆனால் தைவான் தன்னை ஒரு சுதந்திர, தனி நாடாகப் பார்க்கிறது.

இதற்குச் சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

மேலும் அதிபர் லாய் ஒரு பிரிவினைவாதி என்று சீனா வர்ணித்துள்ளது.

தைவானின் அதிபராக அவர் கடந்த மே மாதம் பதவி ஏற்றதும் தைவானைச் சுற்றி சீனா போர்ப் பயிற்சிகளை நடத்தியது.

மதிய உணவுக்குப் பிறகு, பெங்ஹு முகாமில் அதிகாரிகளிடம் பேசிய அதிபர் லாய், தைவானிய ஆயுதப் படைகளின் ஆயுதங்களை மேம்படுத்தத் தமது அரசாங்கம் கடப்பாடு கொண்டுள்ளதாகக் கூறினார்.

பெங்ஹு முகாம் தைவானிய விமானப் படைக்கு மிகவும் முக்கியமாக தளமாகும்.

பெங்ஹு விமானப் படை முகாமுக்கு அருகில் உள்ள வான் தற்காப்பு நிலையத்தில் இருந்த ராணுவ வீரர்களை அதிபர் லாய் நேரில் சந்தித்துப் பேசினார்.

அங்கு நடத்தப்பட்ட போர்ப் பயிற்சியை அவர் பார்வையிட்டார்.

குறிப்புச் சொற்கள்