ஹாங்காங்: சீன அரசாங்கத்துக்கும் செல்வந்தர் ஜேக் மாவுக்கும் இடையிலான மோதல் கிட்டத்தட்ட மூவாண்டுகளுக்குப் பிறகு ஒரு முடிவுக்கு வரும் வேளையில், ‘ஏண்ட் குரூப்’, ‘அலிபாபா குரூப் ஹோல்டிங்ஸ்’ என்ற அவரது நிறுவனங்கள் பேரிழப்பைச் சந்தித்துள்ளன.
‘ஏண்ட்’ நிறுவனம் மீது நடத்தப்படும் விசாரணையை நிறைவுசெய்யப்போவதாக சீன அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த நிதித் தொழில்நுட்ப நிறுவனத்திற்குக் கிட்டத்தட்ட US$1 பில்லியன் அபராதம் விதிக்கப்பட்டது. நிதித் துறையின் தொடர்பில் பெய்சிங் கொண்டுவந்த விதிமுறைகளை திரு மா குறைகூறியதைத் தொடர்ந்து விசாரணை தொடங்கியது.
இதற்கிடையே, அதிபர் ஸி ஜின்பிங்கின் நிர்வாகம் முன்னணி இணையத் தளங்கள் மீது நடத்திய சோதனையில் அலிபாபா நிறுவனம் சிக்கிக்கொண்டது. 2021ஆம் ஆண்டில் அது US$2.8 பில்லியன் அபராதம் செலுத்தவேண்டியிருந்தது.
இரண்டு நிறுவனங்களும் அந்த விவகாரங்களின் தொடர்பில் அவற்றுக்கான தண்டனையை நிறைவேற்றியிருப்பதாக பெய்சிங்கில் தளம் கொண்டுள்ள ட்ரிவியம் சைனா நிறுவனத்தில் பங்காளியாக இருக்கும் திருவாட்டி கேண்ட்ரா ஷேஃபர் கூறினார்.
திரு மாவின் வீழ்ச்சி 2020ஆம் ஆண்டு அக்டோபரில் தொடங்கியது. அவர் ஷங்காயில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் மேடையேறிப் பேசினார். அந்த நிகழ்வில் முதலீட்டாளர்களும் அரசாங்க அதிகாரிகளும் கலந்துகொண்டனர். சீனா புத்தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் கால முரண்பாடான விதிமுறைகளைக் கொண்டுள்ளதாகக் கூறிய அவர், அவற்றைப் பற்றிக் குறைகூறியிருந்தார்.
திரு மாவின் நிறுவனங்கள் இழந்துள்ள US$850 பில்லியன் (S$1.14 டிரில்லியன்), அனைத்துலக முதலீட்டாளர்களிடையே மீண்டும் நம்பிக்கையை வளர்ப்பது எவ்வளவு சிரமமாக இருக்கும் என்பதற்கான ஓர் அறிகுறி என்று கூறப்படுகிறது.

