தோக்கியோ: ஜப்பானில் ஆக்கமுறை செயற்கை நுண்ணறிவைப் (Generative AI) பயன்படுத்தி நச்சுநிரலை உருவாக்கிய 25 வயது ஆடவருக்கு அக்டோபர் 25ஆம் தேதி சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ரியுகி ஹயாஷி எனும் அந்த ஆடவர் சட்டவிரோதமாக மின்னிலக்கப் பதிவுகளை உருவாக்கியதாகத் தோக்கியோ மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஹயாஷிக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கும்படி அரசாங்க வழக்கறிஞர்கள் கோரினர். இந்நிலையில் அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்டது. அவர் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அத்தண்டனையை நிறைவேற்றத் தொடங்கலாம்.
ஜப்பானில் ஆக்கமுறை செயற்கை நுண்ணறிவைத் தவறாகப் பயன்படுத்தியது தொடர்பான குற்றவியல் வழக்கில் ஒருவர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டிருப்பது இதுவே முதன்முறை என்று கருதப்படுகிறது.
ஹயாஷி, கவாசாக்கி நகரில் உள்ள தனது வீட்டிலிருந்தபடியே கணினியையும் திறன்பேசிகளையும் பயன்படுத்தி 2023ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதிவாக்கில் நச்சுநிரலை உருவாக்கியதாகக் கூறப்பட்டது.
சட்டவிரோதக் கணினி நிரல்களைப் பயன்படுத்தியதுடன் மற்றவர்கள் பெயரில் அவர் ‘சிம்’ அட்டைகளை வாங்கியதாகவும் கூறப்பட்டது.

