கட்டட மேல்தளத்தில் அபின் செடிகளை வளர்த்தவருக்கு ஆறு மாதச் சிறை

1 mins read
ac2c9cb4-512a-4719-add2-a7963a9177fb
சமையலில் சேர்ப்பதற்காக அபின் மலர்ச் செடிகளைத் தான் வளர்ப்பதாக அதிகாரிகளிடம் மாது கூறினார். - படம்: சவுத் சைனா மார்னிங் போஸ்ட்

பெய்ஜிங்: கூரைப் பகுதியில் அபின் மலர்ச் செடிகளை வளர்த்த மாது ஒருவருக்கு ஆறு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பிரபல ‘ஹாட்பாட்’ சமையலுக்குப் பயன்படுத்தப்படும் பொருள்களில் அதுவும் அடங்கும் என்று அதிகாரிகள் கேட்டபோது அந்த மாது கூறினார்.

ஆளில்லா வானூர்திவழி குய்சோவ் மாகாணக் காவல்துறையினர் தங்களின் வழக்கமான சோதனைகளை மேற்கொண்டபோது குடியிருப்புக் கட்டடத்தின் மேலே அபின் மலர்ச் செடிகளைப் பார்த்துவிட்டனர்.

உடனே, அவ்விடத்திற்கு நேரடியாகச் சென்ற அதிகாரிகள் 900க்கும் மேற்பட்ட செடிகளை, ‘ஸாங்’ என்ற மாது வளர்த்துவருவதாக அறிந்துகொண்டனர்.

செடியின் மாதிரிகளை எடுத்துப் பரிசோதித்ததில் அவை அபின் மலர்ச் செடிகள் என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

இறப்பதற்கு முன் தன் தந்தை விதைகளைத் தன்னிடம் கொடுத்ததாகவும் அவற்றை இவ்வாறு விதைத்து, சமைக்கும் ‘ஹாட்பாட்’ உணவில் அதை ருசிக்காகச் சேர்த்து வருவதாகவும் மாது கூறினார்.

சட்டவிரோத போதைப்பொருளை இவ்வாறு செடியாக வளர்த்ததன் தொடர்பில் மாது மீது குற்றம் சாட்டப்பட்டது.

அதையடுத்து சிறைத் தண்டனையுடன் 3,000 யுவான் அபராதமும் நீதிமன்றத்தில் விதிக்கப்பட்டது.

சீனாவில் உணவின் சுவையைக் கூட்ட, அபின் செடிகளிலிருந்து பெறப்படும் ‘கசகசா’வை உணவில் தூவுவதைச் சமையல் வல்லுநர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்