ஜகார்த்தா: இந்தோனீசியாவின் ‘அனாக் கிராக்கதாவ்’ எரிமலைச் சீற்றம் காரணமாக அங்குள்ள ஆறு விமான நிலையங்களின் சேவைகள் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 6) தற்காலிகமாக நிறுத்தப்பட்டதால் 150,000க்கும் மேற்பட்ட பயணிகள் தவித்து வருகின்றனர்.
ஜாவா, சுமத்ரா தீவுகளுக்கு இடையே, சுண்டா நீரிணைப் பகுதியில் அமைந்துள்ள அந்த எரிமலையிலிருந்து காற்றில் பரவிய சாம்பல் படலம் காரணமாக, தலைநகர் ஜகார்த்தாவின் சகர்னோ-ஹாட்டா அனைத்துலக விமான நிலையம் உட்பட ஆறு விமான நிலையங்கள் மூடப்பட்டன.
இதனால் 58 அனைத்துலக விமானங்கள், 10 சரக்கு விமானங்கள் உட்பட மொத்தம் 467 விமானங்கள் ரத்து, தாமதம் மற்றும் மாற்றி விடப்படுதல் போன்ற பாதிப்புகளுக்கு உள்ளாகின.
சிங்கப்பூர், கோலாலம்பூர், டோஹா, சிட்னி ஆகிய நகரங்களுக்கான அனைத்துலக விமானச் சேவைகள் பேரளவில் பாதிக்கப்பட்டதாக இந்தோனீசியப் போக்குவரத்து அமைச்சர் டூடி பூர்வகாந்தி தெரிவித்தார்.
எஸ்ஐஏ, ஸ்கூட் விமானங்கள் ரத்து
செப்டம்பர் 5, 6ஆம் தேதிகளில் சிங்கப்பூர் - ஜகார்த்தா இடையே இயக்கப்படவிருந்த சேவைகள் உட்பட எஸ்ஐஏ நிறுவனத்தின் 19 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
சாங்கி விமான நிலையத்திலிருந்து ஜகார்த்தாவிற்குச் செல்லவிருந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ), ஸ்கூட் நிறுவனங்களின் விமானங்கள் ஞாயிற்றுக்கிழமை காலையிலேயே ரத்து செய்யப்பட்டன
கருடா இந்தோனீசியா, பாத்திக் ஏர் போன்ற பிற நிறுவனங்களின் சேவைகளும் பாதிக்கப்பட்டடன
சூழ்நிலை தொடர்ந்து மாறிவருவதால் மற்ற எஸ்ஐஏ விமானச் சேவைகளும் பாதிக்கப்படலாம் என்பதால், பயணிகள் தங்களது பயண நிலவரத்தை இணையத்தில் சரிபார்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மாற்று ஏற்பாடு
விமான நிலையங்களில் நூற்றுக்கணக்கான பயணிகள் தவித்துவரும் நிலையில், அவர்களுக்குத் தேவையான பணத்தைத் திரும்ப அளிப்பது அல்லது மாற்று ஏற்பாடுகளைச் செய்வதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு விமான நிறுவனங்களுக்கு இந்தோனீசிய அரசு உத்தரவிட்டுள்ளது.
மாற்று ஏற்பாடாக கர்ஜதி அனைத்துலக விமான நிலையம் உட்பட மூன்று விமான நிலையங்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
சாங்கி விமான நிலையத்தில் ஜகார்த்தா செல்லவிருந்த பயணிகள் இந்தத் தடங்கல்களைப் பொறுமையுடன் எதிர்கொண்டனர். மலேசியாவில் விடுமுறையைக் கழித்துவிட்டுச் சிங்கப்பூர் வழியாகத் தாய்நாடு திரும்பவிருந்த 33 வயது இந்தோனீசிய வரி ஆலோசகரான டாமி, தனது விமானம் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இந்தத் தாமதத்தைத் தங்களது விடுமுறையின் நீட்டிப்பாகக் கருதுவதாகத் தெரிவித்தார்.
சுனாமி ஆபத்து இல்லை
ஜாவா, சுமத்ரா தீவுகளுக்கு இடையே அமைந்துள்ள அனாக் கிராக்கதாவ் எரிமலை செப்டம்பர் 4ஆம் தேதி இரவு முதல் சீறி வருகிறது. எரிமலைச் சாம்பல் ஜாவா தீவுப் பகுதியில் 20,000 அடி உயரத்திற்கும், சுமத்ரா பகுதியில் 50,000 அடி உயரத்திற்கும் பரவியுள்ளது.
கண் எரிச்சல், மூச்சுத் திணறல் ஏற்படுவதைத் தவிர்க்க முகக்கவசம் அணியுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
கிட்டத்தட்ட 452 இயங்கு எரிமலைகளைக் கொண்டுள்ள பசிபிக் ‘நெருப்பு வளையத்தில்’ அமைந்துள்ள அப்பகுதியில், 2018ஆம் ஆண்டில் ஏற்பட்ட சுனாமியில் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இருப்பினும், தற்போதைய வெடிப்பால் உடனடியாக சுனாமி ஏற்படும் அபாயம் எதுவும் இல்லை என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 6) காலை 11.30 மணி நிலவரப்படி 19 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன என்று எஸ்ஐஏ தெரிவித்தது. இதில் முன்னதாக நேரம் மாற்றப்பட்ட இரண்டு விமானங்களும் அடங்கும்.
சனிக்கிழமை அன்று (செப்டம்பர் 5) சிங்கப்பூரிலிருந்து ஜகார்த்தாவிற்குப் புறப்பட்ட ஒரு விமானம், ஜகார்த்தாவிலிருந்து சிங்கப்பூருக்குப் புறப்பட்ட மற்றொரு விமானம் ஆகிய இரண்டு எஸ்ஐஏ விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
