ஜகார்த்தா: இந்தோனீசியாவின் எதிர்க்கட்சி ஆதரவுடன் போட்டியிட்ட வேட்பாளர் ஜகார்த்தா நகர ஆளுநர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ளார்.
அதிபர் பிரபோவோ சுபியோந்தோவின் ஆதரவுடன் போட்டியிட்ட ரிடுவான் காமிலுக்கு எதிராக முன்னாள் மத்திய அமைச்சர் பிராமோனோ அனுங் வென்றார்.
கடந்த நவம்பர் மாதம் 27ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் திரு பிராமோனோ 50.07 விழுக்காட்டு வாக்குகளைப் பெற்றார். ஒரே சுற்றில் தேர்தலில் வெற்றிபெற வேட்பாளர் 50 விழுக்காட்டுக்கும் மேலான வாக்குகளைப் பெற வேண்டும்.
திரு பிரபோவோ, அவருக்கு முன்பு இந்தோனீசிய அதிபராகப் பதவி வகித்த ஜோக்கோவி என்றழைக்கப்படும் ஜோக்கோ விடோடோ ஆகியோரின் ஆதரவுடன் போட்டியிட்ட திரு ரிடுவான் காமில் 39.4 விழுக்காட்டு வாக்குகளைப் பெற்றார்.
சுயேச்சை வேட்பாளர் தர்மா பொங்கிரேக்குன் 10.53 விழுக்காட்டு வாக்குகளைப் பெற்றார்.சினிக்கிழமை (டிசம்பர் 7) வாக்குகளை எண்ணும் நடவடிக்கை நிறைவடைந்ததைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட அதிகாரபூர்வ முடிவுகளில் இவ்விவரங்கள் தெரிய வந்தன. முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்க விரும்பும் வேட்பாளர்கள் அரசியலமைப்பு நீதிமன்றம் ஒன்றில் மூன்று நாள்களுக்குள் வழக்குப் பதிவு செய்யலாம்.
இந்த வெற்றி, இந்தோனீசியாவின் ஒரே எதிரக்கட்சியாக விளங்கும் இந்தோனீசிய ஜனநாயகப் போராட்டக் கட்சிக்குக் (Indonesian Democratic Party of Struggle) கிடைத்த எதிர்பாரா வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.