நெதர்லாந்துடன் போராடிச் சமநிலை கண்டது ஜப்பான்; கியூரசாவை 7-1 என்று வீழ்த்தியது ஜெர்மனி

உலகக் கிண்ணக் காற்பந்து 2026

நெதர்லாந்துடன் போராடிச் சமநிலை கண்டது ஜப்பான்; கியூரசாவை 7-1 என்று வீழ்த்தியது ஜெர்மனி

2 mins read
8d7e4c34-954f-450b-aeec-d35b64382979
ஜப்பானின் இரண்டாது கோலைப் போட்ட பின்பு கொண்டாடினார் தைச்சி கமதா (நீலச் சட்டை). - படம்: ராய்ட்டர்ஸ்

அர்லிங்டன்: டெக்சஸ் மாநிலத்தின் அர்லிங்டன் நகரில் நடைபெற்ற நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில், 2-2 எனும் கோல் எண்ணிக்கையில் ஜப்பான் சமநிலை கண்டுள்ளது.

‘எஃப்’ பிரிவின் முதல் ஆட்டத்தில், இரண்டு முறை பின்னால் இருந்த ஜப்பான், போராடும் குணத்தை வெளிப்படுத்தி, கோல் எண்ணிக்கையைச் சமப்படுத்தியது.

நெதர்லாந்தின் வர்ஜில் வான் டைக் ஆட்டத்தின் 51வது நிமிடத்தில் கோல் புகுத்தினார். ஆறே நிமிடத்தில் ஜப்பானின் கியெத்தோ நக்கமுரா, பந்தை வலைசேர்த்து ஆட்டத்தைச் சமநிலைக்குக் கொண்டுவந்தார்.

பின்னர் மீண்டும் 64வது நிமிடத்தில் நெதர்லாந்து அணி முன்னுக்குச் சென்றது. இம்முறை, அந்த அணிக்கு உதவியவர் கிரசென்சியோ சம்மர்வில். ஜப்பானின் தைச்சி கமதா ஆட்டத்தின் 89வது நிமிடத்தில் கோல் போட்டார். கோல் எண்ணிக்கை மீண்டும் சமமானது.

முன்னதாக ஹூஸ்டன் நகரில் நடைபெற்ற ‘ஈ’ பிரிவு ஆட்டத்தில், ஜெர்மனி, 7-1 எனும் கோல் கணக்கில் உலகக் கிண்ணப் போட்டிகளில் முதன்முறையாகப் பங்கெடுக்கும் கியூரசாவை வீழ்த்தியது.

ஜெர்மனி, அடுத்துவரும் ஆட்டங்களில் எக்குவடோரையும் ஐவரி கோஸ்ட்டையும் சந்திக்கவிருக்கிறது. அந்த ஆட்டங்கள் கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெர்மனியின் முதல் கோலை ஃபீலிக்ஸ் நெமச்சா ஆட்டத்தின் ஆறாவது நிமிடத்தில் போட்டார். 21வது நிமிடத்தில் அதனைச் சமப்படுத்தினார் கியூரசாவின் லிவானோ கொமெனென்சியா.

அதன் பின்னர், நிக்கோ ‌‌ஷ்லோட்டர்பெக், ஜமால் முசியாலா, நத்தேனியல் பிரௌன், டெனிஸ் உண்டாவ் ஆகியோர் ஆளுக்கு ஒரு கோலையும் கை ஹாவெர்ட்ஸ் இரண்டு கோல்களையும் புகுத்திக் கியூரசாவைத் திக்குமுக்காடச் செய்தனர். இறுதியில் 7-1 எனும் கோல் கணக்கில் வெற்றிகண்டது ஜெர்மனி.

குறிப்புச் சொற்கள்