தோக்கியோ: ஜப்பானிய அரசாங்கமும் ஆளும் கூட்டணியும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் தற்காப்புச் செலவினங்களைக் கிட்டத்தட்ட இரட்டிப்பாக்குவது குறித்துப் பரிசீலித்து வருவதாகத் தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
நாட்டின் ராணுவ வலிமையை மேம்படுத்துவதற்காகப் பிரதமர் சானே தக்காய்ச்சி முன்னெடுக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக அது பார்க்கப்படுகிறது.
இது ஏற்றுக்கொள்ளப்பட்டால், 2027ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் தொடங்கும் ஐந்து ஆண்டுகளுக்கான தற்காப்புக் கட்டமைப்புச் செலவினம், 70 டிரில்லியன் யென் முதல் 80 டிரில்லியன் யென் (567 பில்லியன் முதல் 648 பில்லியன் சிங்கப்பூர் டாலர்) வரை நிர்ணயிக்கப்படும். இது 2023 நிதியாண்டில் தொடங்கப்பட்ட தற்போதைய ஐந்தாண்டுத் திட்டத்தின்கீழ் ஒதுக்கப்பட்ட சுமார் 43 டிரில்லியன் யென்னுடன் ஒப்பிடுகையில் ஏறத்தாழ 1.8 மடங்கு அதிகம்.
ஆண்டிறுதிக்குள் அரசாங்கம், வரவுசெலவுத் திட்டத்தைத் தயாரித்து, பாதுகாப்பு தொடர்பான அதன் மூன்று ஆவணங்களைத் திருத்தியமைக்கும்போது இந்த எண்ணிக்கை மாறுபடக்கூடும். இந்த நேரத்தில் கருத்து எதுவும் தெரிவிக்க இயலாது என ஜப்பானியத் தற்காப்பு அமைச்சு தெரிவித்தது.
பெரிய அளவிலான ஆளில்லா வானூர்திகள் போன்றவற்றை வாங்குவதற்கு இந்தப் புதிய செலவினம் நிதி அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகத் தகவலறிந்த வட்டாரம் ஒன்று ராய்ட்டர்சிடம் தெரிவித்தது. யென் நாணயத்தின் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளதால் தற்காப்புக் கருவிகளை வாங்குவதற்கான செலவு கூடியுள்ளதாகவும் அது குறிப்பிட்டது.
இறுதித் தொகை 70 டிரில்லியன் யென்னைத் தாண்டக்கூடும் என்று இன்னொரு வட்டாரம் தெரிவித்தது. எனினும், கிழக்காசியாவின் தற்காப்புச் சூழலைக் கருத்தில் கொள்ளும்போது இந்தத் தொகை போதுமானதாக இருக்குமா என்ற கேள்வியும் முன்வைக்கப்பட்டது. இறுதித் தொகை, அரசாங்கத்திற்கும் கூட்டணிக் கட்சிகளுக்கும் இடையிலான விவாதத்திற்கு உட்பட்டது என்றும் அந்த வட்டாரம் கூறியது.
