தோக்கியோ: ஜப்பானின் தென்பகுதியில் உள்ள ஓய்ட்டா நகரில், குடியிருப்புப் பகுதி ஒன்றில் மூண்ட தீயால் பேரளவிலான சேதம் ஏற்பட்டுள்ளது.
170க்கும் மேற்பட்ட கட்டடங்கள் தீக்கு இரையாகின.
இரவு முழுவதும் கொழுந்துவிட்டு எரிந்த தீ, சிங்கப்பூர் நேரப்படி புதன்கிழமை (நவம்பர் 19) காலை 11 மணி நிலவரப்படி அணைக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
தீயை அணைக்கத் தீயணைப்பாளர்கள் தொடர்ந்து போராடி வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.
தீப்பிடித்து எரியும் பகுதியில் காற்று பலமாக வீசுவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
பாதிக்கப்பட்ட வட்டாரத்தைச் சேர்ந்த ஏறத்தாழ 175 குடியிருப்பாளர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டதாக ஜப்பானின் தீயணைப்பு, பேரிடர் நிர்வாக அமைப்பு கூறியது.
அவர்கள் அனைவரும் துயர்துடைப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ஒருவரைக் காணவில்லை என்றும் தீ மூண்டதற்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடத்தப்படும் என்று ஜப்பானிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொடர்புடைய செய்திகள்
அருகில் உள்ள வனப்பகுதிகளுக்கும் தீ பரவி இருப்பதாக ஜப்பானிய ஊடகம் தெரிவித்தது.
தீப்பிழம்புகள் உயர்ந்து தெரிந்தது என்றும் இந்த அளவுக்குத் தீ பரவும் என்று யாரும் நினைத்துப் பார்க்கவில்லை என்றும் பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களில் ஒருவர் ஜப்பானிய ஊடகத்திடம் தெரிவித்தார்.

