ஜப்பான் போக புதிய விதிமுறை

ஜப்பான் போக புதிய விதிமுறை

2 mins read
1fba3c61-d87e-47df-ae14-c94f075171bd
புதிய சோதனை முறை விசாயின்றி ஜப்பானுக்குப் பயணம் மேற்கொள்வோருக்குப் பொருந்தும். - கோப்புப் படம்: இபிஏ

தோக்கியோ: ஜப்பான், பயணிகளுக்கான புதிய சோதனை முறையை நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.

விசாயின்றி அந்நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வோருக்கு இது பொருந்தும். சிங்கப்பூர், மலேசியா, இந்தோனீசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகள் அவற்றில் சில.

அனுமதிக்கப்பட்ட காலத்தைத் தாண்டி பயணிகள் தொடர்ந்து ஜப்பானில் இருப்பதைத் தவிர்க்க இந்த முறையைக் கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ளது என்று சாங்கெய் ‌ஷிம்புன் எனும் ஜப்பானிய செய்தித்தாள் இம்மாதம் 21ஆம் தேதியன்று தெரிவித்தது.

71 நாடுகளைச் சேர்ந்தோர் விசாயின்றி 14லிருந்து 90 நாள்கள் வரை ஜப்பானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளலாம். அதிகபட்ச கால அவகாசம் அந்தந்த நாடுகளுக்கான விதிமுறைகளைப் பொறுத்தது.

தற்போதைக்கு இந்தப் புதிய சோதனை முறைக்கு ஜெஸ்டா என்று பெயரிடப்பட்டுள்ளது. இது, பயங்கரவாதச் செயல்களைத் தடுக்கும் நோக்கில் அமெரிக்கா நடைமுறைப்படுத்தியிருக்கும் எஸ்டா முறையைப் போன்றதாகும்.

2030ஆம் ஆண்டுக்குள் ஜெஸ்டாவை நடைமுறைப்படுத்த ஜப்பானிய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இவ்வாண்டு முற்பாதியில் சுமார் 17.78 மில்லியன் பேர் ஜப்பானுக்குப் பயணம் மேற்கொண்டதாக அந்நாட்டின் தேசிய சுற்றுலா அமைப்பு கடந்த ஜூலை மாதம் தெரிவித்தது.

கடந்த ஜூன் மாதம் 3.1 மில்லியன் பேர் ஜப்பானுக்குப் பயணம் மேற்கொண்டனர். அந்த எண்ணிக்கை, தொடர்ந்து நான்காவது மாதமாக மூன்று மில்லியனைத் தாண்டியது.

கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவலுக்கு முன்பு 2019ஆம் ஆண்டில் 31.9 மில்லியன் பயணிகள் ஜப்பான் சென்றுவந்தனர். இவ்வாண்டுக்கான அந்த எண்ணிக்கை வரலாறு காணாத அளவில் 35 மில்லியனைத் தொடும் என்று ஜப்பான் தேசிய சுற்றுலா அமைப்பு கணித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்