ராணுவத்திற்குப் புத்துயிரூட்டுவதாகச் சீனா கூறியதற்கு ஜப்பான் எதிர்ப்பு

ராணுவத்திற்குப் புத்துயிரூட்டுவதாகச் சீனா கூறியதற்கு ஜப்பான் எதிர்ப்பு

2 mins read
f4b0657e-8442-40ed-bd6f-64426a81852a
சீனாவின் வெளியுறவு அமைச்சர் வாங் யி. - படம்: ராய்ட்டர்ஸ்

தோக்கியோ: ஜப்பானில் வலசாரிப் பிரிவினர் ராணுவத்திற்குப் புத்துயிரூட்ட முயல்வதாகப் பெய்ஜிங்கின் மூத்த அரசதந்திரி வாங் யி குற்றஞ்சாட்டியதற்குத் தோக்கியோ கடும் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறது.

“வலசாரிப் பிரிவினர் அல்லது ராணுவத்திற்குப் புத்துயிரூட்ட விரும்புவோரால் ஜப்பானியர்கள் திசை திருப்பப்படுவதற்கோ ஏமாற்றப்படுவதற்கோ இனியும் அனுமதிக்கக்கூடாது,” என்றார் வாங்.

“அமைதியை விரும்பும் நாடுகள் அனைத்தும் ஜப்பானுக்குத் தெளிவான எச்சரிக்கையை விடுக்க வேண்டும். ராணுவப் பாதைக்குத் தோக்கியோ மீண்டும் திரும்பினால், சுய-அழிவுக்கு இட்டுச் செல்வதைத்தான் அது குறிக்கும்,” என்று அவர் சொன்னார்.

ஜெர்மனியில் மியூனிக் பாதுகாப்பு மாநாட்டில் சீன வெளியுறவு அமைச்சர் வாங் பேசினார். ஜப்பானியப் பிரதமர் சானே தக்காய்ச்சி கடந்த ஆண்டு (2025) நவம்பரில் தைவான் குறித்துச் சொன்ன கருத்தால் சீனா சினமடைந்தது. பிரதமராகப் பொறுப்பேற்ற ஒருசில வாரங்களிலேயே, தைவான்மீது தாக்குதல் நடத்தப்பட்டால் ஜப்பானிய ராணுவம் தலையிடும் என்று அவர் கூறியது சர்ச்சையைக் கிளப்பியது.

சுய ஆட்சி நடைபெறும் தைவானுக்குச் சீனா சொந்தம் கொண்டாடுகிறது. அதனைத் தனது கட்டுக்குள் கொண்டுவரப் படைபலத்தைப் பயன்படுத்தத் தயங்கப்போவதில்லை என்று பெய்ஜிங் தொடர்ந்து எச்சரித்துவருகிறது.

இந்நிலையில் ஜப்பானுடனான தற்போதைய உறவுநிலை பற்றித் திரு வாங் குறிப்பிடுகையில் ராணுவத்திற்குத் தோக்கியோ புத்துயிரூட்ட முயல்வதாகக் கூறினார்.

ஜப்பானிய வெளியுறவு அமைச்சு, அவரின் கருத்தில் உண்மையில்லை என்றும் அது ஆதாரமற்றது என்றும் குறிப்பிட்டு ‘எக்ஸ்’ தளத்தில் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 15) அறிக்கையொன்றைப் பதிவிட்டது.

“கடும் பாதுகாப்புச் சூழலுக்கு இடையில் தற்காப்பு ஆற்றல்களை வலுப்படுத்த ஜப்பான் முயற்சிகளை எடுக்கிறது. எந்த மூன்றாம் நாட்டையும் குறிவைத்து அவை மேற்கொள்ளப்படவில்லை,” என்று அது தெரிவித்தது.

பாதுகாப்பு மாநாட்டின் இன்னோர் அமர்வில் பேசிய ஜப்பானிய வெளியுறவு அமைச்சர் தோ‌ஷிமிட்சு மொட்டேகி, தோக்கியோவின் நிலையைத் தெளிவுபடுத்தியதாகவும் அரசதந்திர வழிகளின் மூலம் சீனத் தரப்புக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டதாகவும் அறிக்கை கூறியது.

குறிப்புச் சொற்கள்