தோக்கியோ: ஜப்பானிய பிரதமர் ஷிகெரு இஷிபா ஏப்ரல் 27ஆம் தேதியிலிருந்து வியட்னாமுக்கும் பிலிப்பீன்ஸுக்கும் நான்கு நாள் அதிகாரத்துவ பயணம் மேற்கொள்கிறார்.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் வரி அறிவிப்பை அடுத்து வட்டார நாடுகளுடனான உறவை ஜப்பான் வலுப்படுத்த முற்படுகிறது.
சீன அதிபர் ஸி ஜின்பிங்கின் தென்கிழக்காசியப் பயணத்தைத் தொடர்ந்து திரு இஷிபாவின் பயணம் அமைகிறது.
உலக நாட்டுத் தலைவர்கள் திரு டிரம்ப்பின் வரிகளை எதிர்கொள்ள போராடும் நிலையில் அமெரிக்காவுக்குப் பதிலாக தன்னை ஒரு நிலையான தெரிவாக சீனா முன்னிறுத்த முயற்சி செய்கிறது.
பயணத்தைத் தொடங்கும் முன் வியட்னாம், பிலிப்பீன்ஸ் உள்ளிட்ட தென்கிழக்காசிய நாடுகள் உலகின் பொருளியலை முன்னெடுத்துச் செல்லும் வளர்ச்சி மையம் என்று திரு இஷிபா சொன்னார்.
ஆனால் திரு டிரம்ப்பின் புதிய வரிகளால் அவை பெரிய தாக்கத்தை எதிர்கொள்வதாகச் சொன்ன அவர், அந்த வட்டாரத்தில் செயல்படும் ஜப்பானிய வர்த்தகங்களும் பாதிக்கப்படும் என்றார்.
“வட்டாரத்தில் உள்ள ஜப்பானிய நிறுவனங்களின் கருத்துகளையும் கவலைகளையும் கவனமாகக் கேட்டறிந்து அதன் அடிப்படையில் வரி விதிப்பை கையாள்வோம்” என்றார் திரு இஷிபா.
அமெரிக்காவின் ஆகப் பெரிய முதலீட்டு நாடாக இருந்தபோதும் கார்கள், எஃகு, அலுமினியம் ஆகிய இறக்குமதிகள்மீது திரு டிரம்ப் விதித்த வரிகளால் ஜப்பானும் அவதியுறுகிறது.
தொடர்புடைய செய்திகள்
வியட்னாமிலும் பிலிப்பீன்ஸிலும் திரு இஷிபா கிழக்கு, தென் சீனக் கடல்கள்மீது சீனாவின் அதிகரித்துவரும் அழுத்தத்தையும் குறித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.