மணிலா: ஆசிய வட்டாரத்தில் எண்ணெய் கையிருப்பு மற்றும் அவசரகால எண்ணெய் விநியோகம் தொடர்பான ஒத்துழைப்பை ஒருங்கிணைக்க பணிக்குழு ஒன்றை உருவாக்க வேண்டும் என ஜப்பான் யோசனை தெரிவித்துள்ளது.
மணிலாவில் நடைபெற்ற ஆசியான் உச்சநிலை மாநாட்டில் பங்கேற்று, தென்கிழக்கு ஆசியத் தலைவர்கள் மத்தியில் பேசிய ஜப்பானியப் பிரதமர் சானே தக்காய்ச்சி செவ்வாய்க்கிழமை (நவம்பர் 17) அந்த பரிந்துரையை முன்வைத்தார்.
பணிக்குழுவை உருவாக்குவதன் மூலம் ஜப்பானில் பயன்படுத்தப்படாமல் இருக்கும் சேமிப்பு வசதிகளை இந்த வட்டாரத்தில் உள்ள அண்டை நாடுகள் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்றார் அவர்.
மேலும், அந்த முயற்சி பிலிப்பீன்ஸ் தலைமையிலான கூட்டு எண்ணெய் சேமிப்புத் திட்டத்துடன் ஒருங்கிணைக்கப்படும் என்று கூறிய திருவாட்டி தக்காய்ச்சி, அனைத்துலக எரிசக்தி முகமையின் ஆசிய நடவடிக்கைகளுக்கு இணையான ஒன்றாக அதனை முன்னெடுக்க ஜப்பான் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
மத்திய கிழக்கு எண்ணெய் உற்பத்தி நாடுகளுக்கும் ஆசிய எரிசக்தி பயனீட்டு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட வளைகுடா மின்னாற்றல் முன்முயற்சி ஒன்றையும் அவர் முன்மொழிந்தார்.
ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் மத்திய கிழக்கு எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் ஏற்படும் இடையூறுகளால் ஆசிய நாடுகள் எளிதில் பாதிக்கப்படக்கூடிய சூழல் இருப்பதை ஈரான் போர் உணர்த்தியது.
அதனையடுத்து, ஆசிய நாடுகள் தங்கள் எரிசக்திப் பாதுகாப்பை வலுப்படுத்த முயன்று வருகின்றன.
ஜப்பானின் இயற்கை வளங்கள் மற்றும் எரிசக்தி முகமையின் தகவல்படி, இந்த நீரிணை வழியாகச் செல்லும் கச்சா எண்ணெய்யில் ஏறத்தாழ 90 விழுக்காடு ஆசிய நாடுகளுக்கே செல்கிறது.
இந்நிலையில், ஆசியான் உச்சநிலை மாநாட்டில் பேசிய பிலிப்பீன்ஸ் அதிபர் பெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர், தமது நாடு உத்திபூர்வ பெட்ரோலிய கையிருப்புத் திட்டத்தில் முன்னேற்றம் கண்டு வருவதாகவும் வட்டார எரிசக்திப் பாதுகாப்பை வலுப்படுத்த எரிசக்தித் திட்டங்களுக்கான முதலீட்டு வாய்ப்புகளைத் தேடி வருவதாகவும் தெரிவித்தார்.
