நிரந்தரவாசம் நாடுவோருக்கு விதிமுறைகள் கடுமையாகும்: ஜப்பான்

நிரந்தரவாசம் நாடுவோருக்கு விதிமுறைகள் கடுமையாகும்: ஜப்பான்

படம்: புளூம்பர்க்

01 Oct 2026 - 4:43 pm

2 mins read

தோக்கியோ: ஜப்பானில் முதியோர் எண்ணிக்கை அதிகரித்துவரும் வேளையில் அந்நாட்டில் புதிய குடியேறிகளுக்கு எதிர்ப்பும் வலுத்துவருகிறது.

வெளிநாட்டுக் குடியேறிகளைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தின் அங்கமாக பிரதமர் சனேய் தக்காய்ச்சி வியாழக்கிழமை (அக்டோபர் 1) முதல் நிரந்தரவாசத் தகுதிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு விதிமுறைகளைக் கடுமையாக்கினார். நிரந்தரவாச விண்ணப்பங்களின் கட்டணம் 20 மடங்கு உயர்த்தப்படும் என்பதும் புதிய விதி

புதிய விதிமுறைகளின்படி ஜப்பானில் நிரந்தரமாக வாழ விரும்புவோர் அவர்களது ஓர் ஆண்டின் வருமானத்தை சராசரிக்கும் அதிகமாக உள்ளதென்பதை உறுதி செய்யவேண்டும். அதோடு சாதாரண உரையாடல்களை ஜப்பானிய மொழியில் மேற்கொள்வது அவசியம்.

ஏஎஃப்பி ஊடகத்தினர் மத்திய தோக்கியோவில் இயங்கும் அலுவலகத்தைச் சில நாள்களுக்கு முன் பார்வையிடச் சென்றபோது அங்கு நூற்றுக்கணக்கானோர் வரிசைபிடித்து நிற்பதைக் கண்டனர். உயர்த்தப்படவுள்ள கட்டணங்களைத் தவிர்க்க பலர் அவ்வாறு சென்றிருந்தனர்.

அது குறித்துக் கூறிய அமெரிக்க மாணவி ஒருவர், “ஜப்பானின் தனிப்பட்ட கலாசாரம் நீர்த்துப்போக வழிவகுக்கும் என்பதால் வெளிநாட்டினரை அதிக அளவு ஏற்பதில் உள்ள பிரச்சினையைப் புரிந்துகொள்கிறேன். ஆனால் குறைந்த பிறப்பு விகிதத்தையும் முதிர்ச்சியடைந்துள்ள மக்கள்தொகையையும் கவனத்தில் வைத்து வெளிநாட்டவரை ஜப்பான் ஏற்றுக்கொள்ளவேண்டும்,” என்றார்.

சரளமாக ஜப்பானிய மொழி பேசும் அவர் ஐந்து மணி நேரமாக ஆவணங்களைப் பதிவு செய்யக் காத்திருந்தார். முந்தைய விதிமுறைகள் வருமானத்துக்கான குறிப்பிட்ட வரம்பையோ, மொழித் திறனையோ எதிர்பார்க்கவில்லை.

பல தொழில்துறைகளில் ஊழியர்கள் பற்றாக்குறையை ஜப்பான் எதிர்நோக்கியுள்ளது. வெளிநாட்டு குடியேறிகளின்மீது எதிர்ப்பும் அங்கு அதிகரித்துவருகிறது. ஆகவேதான் அதனைக் கட்டுப்படுத்த பிரதமர் தக்காய்ச்சி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்
ஜப்பான்வெளிநாட்டு ஊழியர்குடிநுழைவுவிதிமுறைபிரதமர்மொழிபதிவுமாணவர்பல்கலைக்கழகம்அமெரிக்காபிறப்பு விகிதம்மக்கள்தொகை