தோக்கியோ: ஜப்பானிய பிரதமர் ஷிகெரு இஷிபா, தனது நாட்டுக்கு எதிரான வரியைக் குறைக்க அமெரிக்க அதிபரிடம் கோரிக்கை விடுக்கப்படும் என்று திங்கட்கிழமை (ஏப்ரல் 7) அன்று தெரிவித்தார்.
ஆனால் ஒரே நாளில் பதில் கிடைத்துவிடாது என்றார் அவர்.
அமெரிக்க வரி விதிப்பால் பொருளியலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பைக் குறைக்க தனது அரசாங்கம் ஆன அனைத்தையும் செய்யும் என்று நாடாளுமன்றத்தில் அவர் தெரிவித்தார்.
உள்நாட்டு நிறுவனங்களுக்கு நிதியாதரவு, வேலைகளைப் பாதுகாக்கும் நடவடிக்கைகள் உள்ளிட்டவை அவற்றில் அடங்கும்.
ஜப்பானிலிருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு டோனல்ட் டிரம்ப் விதித்துள்ள வரி மிகவும் ஏமாற்றம் தருவதாகவும் வருத்தமளிப்பதாகவும் ஜப்பானிய பிரதமர் மேலும் தெரிவித்தார்.
அதிபர் டோனல்ட் டிரம்ப்பை சந்திக்க விரைவில் அமெரிக்கா செல்ல விரும்புவதாகக் கூறிய திரு இஷிபா, அதற்கு தங்களது தரப்பு திட்டத்தைத் தயாராக வைத்திருப்பது அவசியம் என்று சொன்னார்.
அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு அதிபர் டிரம்ப் 25 விழுக்காடு வரி விதித்துள்ளார். இதர ஜப்பானியப் பொருள்களுக்கு 24 விழுக்காடு வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜப்பானிய பொருளியல் பெருமளவில் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜப்பான் உள்பட உலக அளவில் பொருளியல் மந்தம் ஏற்படும் என்று பொருளியல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.