தோக்கியோ: ஜப்பானில் உள்ள ஃபுக்குஷிமா அணுசக்தி ஆலையின் கழிவுநீரை பசிபிக் பெருங்கடலில் திறந்துவிடுவது குறித்து சீனாவில் இருந்து தொல்லைதரும் தொலைபேசி அழைப்புகள் வருவது வருத்தத்திற்கு உரியது என்று ஜப்பான் கூறியுள்ளது.
“அதிக எண்ணிக்கையில் தொல்லைதரும் தொலைபேசி அழைப்புகள் சீனாவிலிருந்தே விடுக்கப்படுவதாக நம்பப்படுகிறது. இது மிகவும் வருத்தத்திற்கு உரியது. இதுகுறித்து நாங்கள் கவலை அடைந்துள்ளோம்,” என்று ஜப்பானிய அரசாங்கத்தின் உயர்நிலை பேச்சாளர் ஹிரோகாஸு மட்சுனோ செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.
ஜப்பானில் 2011ஆம் ஆண்டு அடுத்தடுத்து நேர்ந்த சுனாமியாலும் வலுவான நிலநடுக்கத்தாலும் ஃபுக்குஷிமா அணுசக்தி ஆலை பாதிக்கப்பட்டது. அதிலிருந்த கழிவுநீரை ஜப்பான் வியாழக்கிழமை முதல் திறந்துவிடத் தொடங்கியது.
திரு மட்சுனோவின் கருத்து குறித்து ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கேட்டதற்கு சீன வெளியுறவு அமைச்சு பதிலளிக்கவில்லை.