தோக்கியோ: அரிய மண்வளத்தை நாடி ஜப்பான் ஆழ்கடலைத் துளையிட திட்டமிட்டுள்ளது. அவ்வகையான மண்ணுக்காக சீனாவை சார்ந்திருப்பதைத் தவிர்க்க இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
ஏறத்தாழ 6.000 மீட்டர் ஆழ்கடலில் துளையிட்டு, அந்த அரிய மண்வகை தேடப்படவுள்ளது. உலகில் முதல்முறையாக இந்த ஆழத்தில் இந்நடவடிக்கை ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 11) மேற்கொள்ளப்படுவதாக நம்பப்படுகிறது.
ஜப்பானின் புகழ்பெற்ற எரிமலையான மவுன்ட் ஃபுஜியின் உயரத்தைவிட கடலில் தேடப்படும் ஆழம் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆழ்கடலில் துளையிடும் ‘சிக்யூ’ என்ற ஜப்பானியக் கப்பல் பசிபிக் பெருங்கடலில் உள்ள தொலைதூரத் தீவான மினாமி டொரிஷிமாவைச் சுற்றியுள்ள பகுதியில் அதன் பணியைத் தொடங்கவுள்ளது. அப்பகுதியில் ஏறத்தாழ 16 மில்லியன் டன் அளவு கனிம வளங்கள் நிறைந்துள்ளதாக கருதப்படுகிறது. அதுவே உலகில் மூன்றாவது ஆக அதிக கனிம வளங்கள் நிறைந்த பகுதி என ‘நிக்கெய்’ வர்த்தக நாளிதழ் கூறியுள்ளது.
பூமியின் மேல் தளத்தில் இருந்து மிகவும் கடினமான முறையில் வெளியில் கொண்டுவரப்படும் அரிய மண்வளங்கள் 17 இரும்பு வகைகளை உள்ளடக்கியதாகும். அவையே நாம் பயன்படுத்தும் மின்வாகனங்களில் இருந்து கணினியின் வன்வட்டுகள், கைப்பேசிகள், ராணுவ ஏவுகணைகள், காற்று விசையாழிகள் போன்ற பலவற்றின் தயாரிப்புக்குத் தேவைப்படுகின்றன.
சிக்யூ கப்பல் மேற்கொள்ளப்போகும் செயல்பாடு, அரிய மண்வளத் தொழில்துறையில் அந்நாடு மேற்கொள்ளும் முதல்படி என்று ஜப்பானின் கடல், புவி அறிவியல் தொழில்நுட்ப அமைப்பு (JAMSTEC) கடந்த மாதம் அறிக்கை ஒன்றில் தெரிவித்திருந்தது.
இவ்வித முயற்சியின் பலனால் ஜப்பான் அரிய மண்வளங்களை தொடர்ந்து எடுக்க முடிந்தால், அதன் உள்நாட்டு தொழில்துறைக்கான விநியோகத்தைத் தானே கொண்டுவந்து சீனாவை சார்ந்திருப்பதை குறைக்கமுடியும் என்று ஜப்பானிய நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

