ஜப்பான்: விமானங்களில் கையடக்க மின்னூட்டிகளைப் பயன்படுத்தத் தடை

ஜப்பான்: விமானங்களில் கையடக்க மின்னூட்டிகளைப் பயன்படுத்தத் தடை

ஏப்ரல் 24ஆம் தேதி நடப்புக்கு வரும்
படம்: ஜப்பான் நியூஸ்/ஏஷியா நியூஸ் நெட்வொர்க்

21 Apr 2026 - 6:00 pm

1 mins read

தோக்கியோ: விமானங்களில் கையடக்க மின்னூட்டிகளைப் பயன்படுத்துவதற்கு ஜப்பான் விரைவில் தடை விதிக்கவுள்ளது.

அந்நாட்டின் நில, உள்கட்டமைப்பு, போக்குவரத்து, சுற்றுப்பயண அமைச்சு இதன் தொடர்பில் வரையறுத்துள்ள புதிய கொள்கை ஏப்ரல் 24ஆம் தேதி நடப்புக்கு வரவிருக்கிறது.

அத்துடன், பயணிகள் விமானத்தினுள் அதிகபட்சம் இரண்டு மின்னூட்டிகளை மட்டுமே எடுத்துச் செல்லலாம் என்ற கட்டுப்பாடு விதிக்கப்படவிருக்கிறது.

ஏப்ரல் 14ஆம் தேதி இதுகுறித்த அறிவிப்பை அமைச்சு வெளியிட்டது. இதன்கீழ், பயணிகள் விமானத்தினுள் கையடக்க மின்னூட்டியைப் பயன்படுத்தித் தங்கள் திறன்பேசிகளுக்கோ மற்ற கருவிகளுக்கோ மின்னூட்டம் செய்ய முடியாது. விமானத்திற்குள் இருக்கும் மின்னூட்ட வசதிகள் மூலம் அவர்கள் தங்கள் மின்னூட்டிகளுக்கு மின்னேற்றம் செய்வதற்கும் அனுமதி இல்லை.

இந்த விதிமுறைகளை மீறுவோர்மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

அண்மையில் உள்நாட்டு, வெளிநாட்டு விமானச் சேவைகளில் லித்தியம் மின்கலன்களைக் கொண்ட கையடக்க மின்னூட்டிகளால் தீச்சம்பவங்கள் நிகழ்ந்ததை அடுத்து அமைச்சு இவ்வாறு நடவடிக்கை எடுத்துள்ளது.

ஜப்பானியத் தலைநகர் தோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தில், ஏப்ரல் 14ஆம் தேதி, விமான நிறுவன ஊழியர்கள் பலரும் இப்புதிய விதிமுறைகள் குறித்துப் பயணிகளுக்கு விளக்கிக் கூறும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

குறிப்புச் சொற்கள்