சீனப் பெருஞ்சுவரை அவமதித்த ஜப்பானியர் நாடுகடத்தல்

1 mins read
b1b766dd-d80e-44fe-8572-755a66ce219b
சுற்றுலாப் பயணிகள் அதிகம் காண வருகின்ற உலக அதிசயங்களில் ஒன்றான சீனப் பெருஞ்சுவரின் ஒரு பகுதி - படம்:ஸ்ரெயிட்ஸ் டைம்ஸ்

தோக்கியோ: சீனப் பெருஞ்சுவரைக் காண சுற்றுலா வந்த 20 வயது நிரம்பிய ஜப்பானிய ஆடவரும் மங்கையும் அதனருகே புகைப்படமெடுத்தனர். அது இயற்கையானதாக இருப்பினும் அடுத்து நடந்தது சீனர்களின் கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளது.

ஆடவர் அவரது கீழ்ஆடையை பின்புறத்துக்குக்கீழ் விலக்கியபடி காட்டி நிற்பதை அந்தப் பெண் புகைப்படம் எடுத்ததை அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் கண்டதால் உடனே அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

உலகப் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் இடங்களில் ஒன்றான சீனப் பெருஞ்சுவரை இவ்வாறு அவமதித்த குற்றத்துக்காக அவர்கள் இருவரும் இரண்டு வாரங்கள் சீன அதிகாரிகளால் தடுத்துவைக்கப்பட்டு பின்னர் ஜப்பானுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர் என்று சீன உள்ளூர் ஊடகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஜனவரி 3ம் தேதி இரண்டு ஜப்பானியர்கள் சீனப்பெருஞ்சுவர் அருகில் உள்ளூர் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர் என்பதை சீனாவில் உள்ள தனது தூதரகம் உறுதிசெய்ததாக ஜப்பானிய வெளியுறவு அமைச்சு மார்ச் 14 அன்று உறுதி செய்துள்ளது. அவர்கள் தடுத்துவைக்கப்பட்டு, பின்னர் விடுதலையாகி ஜப்பானுக்கு ஜனவரியில் அனுப்பிவைக்கப்பட்டதாகவும் அமைச்சு கூறியது.

சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள ஜப்பானியத் தூதரகம் எவ்வித பதிலும் சம்பவம் சார்ந்த கேள்விகளுக்கு வழங்கவில்லை. குறும்புச் செயலில் ஈடுபட்டதாக அந்த ஜப்பானியர்கள் தூதரகத்திடம் ஒப்புக்கொண்டதாகச் சிலரால் தெரிவிக்கப்பட்டது.

சீனச் சமூக ஊடகமான வெய்போவில் இச்சம்பவத்தின் குறியீடு 60 மில்லியன் பார்வையாளர்களால் பகிரப்பட்டதால் சீனர்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்