வாஷிங்டன்: ஜப்பானியப் பிரதமர் ஷிகேரு இஷிபா, அடுத்த வாரம் வெள்ளை மாளிகையில் தம்மைச் சந்திக்கவுள்ளதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
“அவர்கள் என்னுடன் பேச வருகை தரவிருக்கின்றனர். அதை நான் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்,” என்று திரு டிரம்ப் தமது அதிபர் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் சொன்னார்.
சந்திப்பு இம்மாதம் ஏழாம் தேதியன்று நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஜப்பானின் அசாஹி செய்தித்தாள் தெரிவித்தது. பொருளியல், பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதன் தொடர்பில் நீண்டகாலமாகப் பங்காளி நாடுகளாக இருந்துவரும் ஜப்பான், அமெரிக்கத் தலைவர்கள் கலந்துபேசுவர் என்று நம்பப்படுகிறது.
திரு டிரம்ப், அமெரிக்க அதிபராகப் பதவியேற்பதற்கு சுமார் ஒரு மாதத்துக்கு முன்பே திரு இஷிபா ஜப்பானியப் பிரதமராகப் பொறுப்பேற்றார். சீனா தொடர்ந்து சக்திவாய்ந்த நாடாக உருவெடுத்து வருவதன் தொடர்பில் கவலைகள் நிலவுவதையொட்டி, இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்றுள்ள திரு டிரம்ப்புடன் அவரது தவணைக்காலத்தின் தொடக்கத்திலேயே நல்லுறவை வளர்த்துக்கொள்ள திரு இஷிபா எண்ணம் கொண்டுள்ளார் என்று தகவல் தெரிந்தவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

