தோக்கியோ: ஆசிய அண்டை நாடுகளுடன், குறிப்பாகச் சீனாவுடன் நெருக்கமான உறவை நாடிய ஜப்பானின் முன்னாள் பிரதமர் யசுவோ ஃபுகுடா காலமானார். அவருக்கு வயது 90.
திரு யசுவோ அக்டோபர் 22ஆம் தேதி இதயச் செயலிழப்பால் மரணமடைந்தார். ஜப்பானிய ஊடகமான நிக்கெய் அந்தத் தகவலை வெளியிட்டது.
திரு யசுவோ பிரதமர் பதவியில் கிட்டத்தட்ட ஓராண்டு காலம் பொறுப்பு வகித்தார்.
2007ஆம் ஆண்டு திரு ஷின்சோ அபே திடீரெனப் பிரதமர் பதவியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து யசுவோ பிரதமரானார்.
தோக்கியோவின் புகழ்பெற்ற வசேடா பல்கலைக்கழகத்தில் பொருளியல் பயின்ற திரு யசுவோ, எண்ணெய் நிறுவனம் ஒன்றில் அமெரிக்கப் பணி என ஏறக்குறைய 20 ஆண்டுகள் பணியாற்றினார்.
பின்னர் அவரது தந்தை டேக்கியோ ஃபுகுடா 1976ல் பிரதமரானபோது அரசியல் செயலாளராகப் பொறுப்பேற்றார் யசுவோ.
1990ல் நாடாளுமன்றத்தின் அதிகாரமிக்க கீழவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2000 முதல் 2004 வரை தலைமை அமைச்சகச் செயலாளராக அவர் இருந்தார். எனினும் ஓய்வூதியத் திட்டத்தில் பணம் செலுத்தாததை ஒப்புக்கொண்டு பதவியிலிருந்து யசுவோ விலகினார்.
பெண்களின் ஆடை குறித்து அவர் 2003ஆம் ஆண்டு தெரிவித்த கருத்துகள் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகின.
