தோக்கியோ: ஜப்பானில் கக்குவான் இருமல் கண்டோரின் ஒருவார எண்ணிக்கை 3,353ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்த தற்போதுள்ள ஆய்வு முறை 2018ஆம் ஆண்டு அறிமுகமானது. அது முதல் தற்போது ஒருவாரத்தில் கக்குவான் இருமல் கண்டோர் எண்ணிக்கையான 3,353 ஆக அதிகமான ஒருவார தொற்று எண்ணிக்கை என்று அந்நாட்டின் தேசிய சுகாதார ஆய்வு நிலையம் செவ்வாய்க்கிழமை கூறியது.
இந்த நோய் மற்றவர்களுக்கு எளிதில் பரவக்கூடிய கடுமையான சுவாசக் குழாய் தொற்று என்று கூறப்படுகிறது. மேலும் இது நிமோனியா, சிறுவர்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடிய மூளைக் காய்ச்சல் போன்றவற்றுக்கும் வழி விடக்கூடியது என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த இருமல் நோய்த் தொற்றுள்ள ஒருவர் குமட்டல் வரும் அளவுக்கு தொடர் இருமலுக்கு ஆளாவார்.
ஜப்பானின் தேசிய சுகாதார நிலையத்தின் ஆரம்பகட்ட தரவுகளின்படி இதுவரை 39,672 பேருக்கு இந்த இருமல் நோய் கண்டிருப்பதாக தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு கிட்டத்தட்ட 4,000 பேருக்கு இந்த இருமல் கண்டுள்ள நிலையில், இவ்வாண்டு இது வேகமாக அதிகரித்துள்ளதாக நிலையம் தெரிவித்துள்ளது. இதில் ஆகக் கடைசி ஒருவார எண்ணிக்கை ஜூன் 23லிருந்து ஜூன் 29வரை கணக்கிடப்பட்டுள்ளது.

