தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஜேஜு ஏர் விபத்து: அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் கறுப்புப் பெட்டி

2 mins read
816887f1-6b4b-4c3b-97fe-7545e7179557
முவான் விமான விபத்தில் மாண்டவர்களுக்கு அங்குள்ள உடற்பயிற்சிக்கூடம் ஒன்றில் அமைக்கப்பட்டுள்ள நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் தந்தை, மகன். - படம்: இபிஏ
multi-img1 of 3

சோல்: தென்கொரியாவில் 179 பேரைப் பலிவாங்கிய ஜேஜு ஏர் விபத்தில் அவ்விமானத்தில் இருந்த கறுப்புப் பெட்டிகளில் ஒன்று ஆராய்வதற்காக அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த கறுப்புப் பெட்டியிலிருந்து குரல்பதிவு மீட்கப்பட்டதாக முன்னதாக புதன்கிழமையன்று (ஜனவரி 1) தெரிவிக்கப்பட்டது. அதிகாரி ஒருவர் அத்தகவலை வெளியிட்டார்.

தாய்லாந்திலிருந்து தென்கொரியாவுக்குச் சென்றுகொண்டிருந்த அந்த போயிங் 737-800 ரக விமானம் அந்நாட்டின் முவான் அனைத்துலக விமான நிலையத்தில் விபத்துக்குள்ளானது. தடுப்பு ஒன்றின் மீது மோதி தீப்பிடித்து எரிந்துபோன அந்த விமானத்தில் இருந்த 181 பேரில் 179 பேர் கொல்லப்பட்டனர்.

சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் 29ஆம் தேதியன்று அவ்விபத்து நேர்ந்தது. அதனைத் தொடர்ந்து தென்கொரிய, அமெரிக்க அதிகாரிகள் சம்பவம் நிகழ்ந்த இடத்தில் விசாரணைக்கு உதவக்கூடிய பொருள்களையும் தடயங்களையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். போயிங் நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகளும் அவர்களில் அடங்குவர்.

ஒரு கறுப்புப் பெட்டியில் இருந்த குரல்பதிவை தகுந்த வடிவத்துக்கு மாற்றும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் இரண்டாவது கறுப்புப் பெட்டியில் இருந்த ஒரு தொடர்புக் கருவியைக் காணவில்லை என்றும் தென்கொரியாவின் பொது விமானத் துறை துணை அமைச்சர் ஜூ ஜோங் வான் தெரிவித்துள்ளார்.

அதில் பதிவான தரவுகளை மீட்பது குறித்து முடிவெடுக்க வல்லுநர்கள் இறுதிப் பரிசீலனை செய்து வருவதாக அவர் கூறினார்.

பறவை மோதியதால் ஜேஜு ஏர் எண் 2216 விமானம் விபத்துக்கு உள்ளானதாக முதலில் கருதப்பட்டது. பின்னர் விமான ஓடுபாதையின் முடிவில் இருந்த தடுப்புச்சுவர் குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

விமான இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரிக்கப்படுகிறது.

இதற்கிடையே, விபத்தில் மாண்டோரின் குடும்பத்தார் இறுதிச் சடங்குகளுக்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர். மாண்ட 179 பேர் அதிகாரபூர்வமாக அடையாளம் காணப்பட்ட பிறகு இறுதிச் சடங்குகளுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

விமானத்தின் பின்பகுதிக்கு அருகே இருந்த விமான ஊழியர்கள் இருவர் மட்டும் விபத்தில் உயிர் தப்பினர். தென்கொரியாவின் ஆக மோசமான விமான விபத்தாக வகைப்படுத்தப்பட்டுள்ள ஜேஜு ஏர் விபத்தில் மாண்டோருக்காக வரும் சனிக்கிழமை (ஜனவரி 4) வரை தேசிய அளவில் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்