ஜேஜூ விமான விபத்துக்குக் காரணம் குறைவாகப் பாதிக்கப்பட்ட இயந்திரம் நிறுத்தப்பட்டது

2 mins read
687d8640-6111-41e9-85a1-b87fec5bcf8a
ஜேஜூ விமானத்தின் இரண்டு இயந்திரங்களிலும் வாத்தின் சிதைவுகள் காணப்பட்டதாக தொடக்கக் கட்ட அறிக்கை தெரிவித்தது. - படம்: ராய்ட்டர்ஸ்

சோல்: கடந்த ஆண்டு டிசம்பரில் ஜேஜூ விமானம் விபத்துக்குள்ளானதற்குப் பறவை மோதியதால் குறைவாகப் பழுதடைந்த இயந்திரத்தை விமானிகள் நிறுத்தியதுதான் காரணம் என்று விசாரணை பற்றி தகவல் அறிந்தவர் தெரிவித்துள்ளார்.

பறவை மோதியதைத் தொடர்ந்து அவசர நடவடிக்கை மேற்கொண்ட விமானிகள் தரையிறங்குவதற்குச் சிறிது நேரத்திற்குமுன் வலது இயந்திரத்திற்குப் பதிலாக இடது இயந்திரத்தின் செயல்பாட்டை நிறுத்தினர்.

விமானத்தில் குரல் பதிவுப் பெட்டி, கணினி தரவுகள், விமானச் சிதைவுகளில் கண்டெடுக்கப்பட்ட இயந்திர விசை ஆகிய சான்றுகள் அதைக் காட்டுவதாக ஜூலை 21 தகவல் அறிந்த வட்டாரம் குறிப்பிட்டது.

சான்றுகளுடன் கூடிய அதிகாரபூர்வ அறிக்கையை அதிகாரிகள் இன்னும் வெளியிடாததால் தகவல் அறிந்தவர் தமது பெயரை வெளிப்படுத்தவில்லை.

அரசாங்கத்தைச் சேர்ந்த அவர், மீட்கப்பட்ட விமான இயந்திரங்களில் பறவை மோதுவதற்கு முன்னும் விபத்துக்கு முன்னும் விபத்திலிருந்து எந்தப் பழுதும் காணப்படவில்லை என்பது சோதனைகளில் கண்டறியப்பட்டதாகக் கூறினார்.

டிசம்பர் 29ஆம் தேதி முவான் விமான நிலையத்தில் போயிங் 737-800 ரக விமானம் விழுந்து நொறுங்கியதில் 181 பயணிகளில் இருவரைத் தவிர சிப்பந்திகள் உள்பட எஞ்சிய அனைவரும் மாண்டனர். தென்கொரியாவில் ஏற்பட்ட ஆக மோசமான விமான விபத்தாக அது கருதப்படுகிறது.

மாண்டோரின் குடும்ப உறுப்பினர்களிடம் பேசிய விசாரணை அதிகாரிகள், பறவை மோதியதில் இடது இயந்திரத்தைவிட வலது இயந்திரம்தான் அதிகமாகச் சேதமடைந்ததாகக் கூறினர். குறைந்த சேதமடைந்த இயந்திரத்தை விமானிகள் நிறுத்தியதற்குப் போதுமான சான்றுகள் இருப்பதாகத் தகவல் அறிந்த மற்றொருவர் குறிப்பிட்டார்.

ஜேஜூ விமானத்தின் இரண்டு இயந்திரங்களிலும் வாத்தின் சிதைவுகள் காணப்பட்டதாக இவ்வாண்டு ஜனவரியில் அதிகாரிகள் வெளியிட்ட ஆரம்பகட்ட அறிக்கை தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்