கோலாலம்பூர்: 1எம்டிபி நிதி மோசடி தொடர்பில் தேடப்பட்டுவரும் ஜோ லோ, பேச்சுவார்த்தைக்காக மலேசியாவிற்குள் நுழையவில்லை என்று அந்நாட்டு நிதித்துறை துணை அமைச்சர் லியூ சின் தோங் தெரிவித்துள்ளார்.
மலேசிய அரசாங்கத்தின் 1எம்டிபி நிதியிலிருந்து பல பில்லியன் டாலரை ஜோ லோ கையாடியதாக நம்பப்படுகிறது.
அதன் காரணமாக ஜோ லோமீது ஊழல், கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றியது என மலேசியாவிலும் அமெரிக்காவிலும் பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
1எம்டிபி நிதியிலிருந்து கிட்டத்தட்ட 5.8 பில்லியன் வெள்ளியைக் கையாடல் செய்ய ஜோ லோ முக்கியப் பங்கு வகித்ததாகவும் கூறப்படுகிறது.
‘சரவாக் ரிப்போர்ட்’ நாளிதழ் வெளியிட்ட செய்தியின்மூலம் 1எம்டிபி நிதி மோசடி வெளிச்சத்திற்கு வந்தது.
அந்த நாளிதழ் கடந்த மே மாதம் வெளியிட்ட செய்தியில் ஜோ லோ 2025ஆம் ஆண்டு மலேசியாவிற்குள் வந்து 1எம்டிபி தொடர்பாகப் பேசியதாகக் குறிப்பிட்டது.
சீனாவின் அரசதந்திரிகளுடன் ஜோ லோ ரகசியமாக மலேசியாவுக்குள் நுழைந்ததாக ‘சரவாக் ரிப்போர்ட்’ கூறுகிறது.
இதுதொடர்பாக மலேசிய நாடாளுமன்றத்தில் கேள்விகள் எழுப்பப்பட்டன. அதற்குத் துணை அமைச்சர் லியூ விளக்கம் கொடுத்தார்.
“ஜோ லோ நாட்டிற்குள் வரவில்லை. மோசடியில் இழந்த பெருந்தொகையை அரசாங்கமே ஈடுகட்ட வேண்டும். இழந்த நிதியை அரசாங்கம் கொஞ்சம் கொஞ்சமாகப் பறிமுதல் செய்து வருகிறது,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

