ஜோகூர் பாரு: மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தைக் கடந்த சில நாள்களாக வெள்ளம் புரட்டிப்போட்டது.
தற்போது வெள்ளம் வடிந்து வரும் நிலையில், துப்புரவுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
நோன்புப் பெருநாள் நெருங்குகையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் குவிந்து கிடக்கும் கழிவுப்பொருள்களை அகற்றும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
துப்புரவுப் பணிகளில் உதவி செய்ய சனிக்கிழமையிலிருந்து (மார்ச் 22) 3,000க்கும் மேற்பட்ட தொண்டூழியர்கள் களமிறக்கப்பட்டுள்ளதாக ஜோகூர் மாநிலச் செயலாளர் ஓன் ஜஃபார் தெரிவித்தார்.
“தொண்டூழியர்களில் பெரும்பாலானோர் இளையர்கள். அவர்களில் பல்கலைக்கழக மாணவர்கள், இளையர் குழு உறுப்பினர்கள், குடியிருப்பாளர் குழு உறுப்பினர்கள், பல்வேறு அமைப்புகள் மற்றும் துறைகளைச் சேர்ந்த அரசாங்க ஊழியர்கள் அடங்குவர்.
“நீர் பீய்ச்சியடிக்கப் பயன்படுத்தப்படும் சாதனங்கள், லாரிகள் போன்ற அரசாங்கத்துக்குச் சொந்தமானவற்றைப் பயன்படுத்தி துப்புரவுப் பணிகள் நடைபெறுகின்றன,” என்று திரு ஓன் ஜஃபார் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 23) கூறினார்.
ஜோகூர் பாருவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் தொண்டூழியர்கள் தற்போது கவனம் செலுத்தி வருவதாகவும் அதன் பிறகு மற்ற மாவட்டங்களில் செயல்படுவர் என்றும் அவர் தெரிவித்தார்.
துப்புரவுப் பணிகளை நோன்புப் பெருநாளுக்கு முன்பு முடிப்பதே இலக்கு என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
வானிலை சாதகமாக இருப்பதால் துப்புரவுப் பணிகள் தொடங்கியதிலிருந்து இதுவரை 30,000க்கும் அதிகமான கழிவுப்பொருள்கள் அகற்றப்பட்டுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
ஜோகூர் பாரு, இஸ்கந்தர் புத்ரி, பொந்தியான், கூலாய் ஆகிய மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 15 பகுதிகளில் துப்புரவுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக எஸ்டபிள்யூஎம் என்வைரமண்ட்டின் தலைமை மேலாளர் முகம்மது நூர்லிசாம் முகம்மது நூர்தீன் கூறினார்.
இதற்கிடையே, வெள்ளத்தால் பண்ணைகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
கங்கார் தெப்ராவில் உள்ள தமது ஆட்டுப் பண்ணை வெள்ளத்தில் மூழ்கியதில் தமக்கு 300,000 ரிங்கிட்டுக்கும் (S$90,000) அதிகமான இழப்பு ஏற்பட்டதாக 55 வயது ஒஸ்மான் செயாகுட்டி தெரிவித்தார்.
இதுபோன்ற வெள்ளம் இனி ஏற்படாதிருக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

