ஜோகூர் பாரு: உட்கட்டமைப்பு மேம்பாடு, பொதுமக்களுக்கு வசதிகள், எளிதில் அணுகுந்தன்மை போன்ற வழிகளில் சுற்றுலாத் துறையை ஊக்குவிக்க மலேசியாவின் ஜோகூர் மாநில அரசு 2025ஆம் ஆண்டிலிருந்து 143.84 மில்லியன் ரிங்கிட்டிற்கும் (S$45.9) அதிகமான தொகையை ஒதுக்கியுள்ளது.
‘விசிட் ஜோகூர் 2026’ இயக்கத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று ஜோகூர் ஒற்றுமை, மரபுடைமை, பண்பாட்டுக் குழுவின் தலைவர் கே. ரேவன் குமார் குறிப்பிட்டார்.
இவ்வாண்டில் 12 மில்லியன் சுற்றுப்பயணிகளை, குறிப்பாக உள்ளூர்வாசிகளையும் சிங்கப்பூர், இந்தோனீசியா போன்ற அண்டை நாட்டினரையும் ஈர்க்கும் நோக்குடன் செயல்பட்டு வருவதாக அவர் கூறினார்.
“நிலவரம் நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. சென்ற ஆண்டில் மட்டும் 25 மில்லியன் வெளிநாட்டுப் பயணிகள் ஜோகூருக்கு வந்துசென்றதாக ஜோகூர் குடிநுழைவுத் துறைத் தரவுகள் காட்டுகின்றன. அதுபோல, இவ்வாண்டின் முதல் இரு மாதங்களில் மட்டும் 3.95 மில்லியன் பேரை ஈர்த்துள்ளோம்,” என்று திரு ரேவன் குமார் விளக்கினார்.
மலேசிய அனைத்துலக வணிக, கண்காட்சி நிலையத்தில் ‘மலேசியச் சுற்றுலா, பயண முகவர் சங்கக் கண்காட்சி ஏப்ரல் 2026’ (மாட்டா 2026) நடந்து வருகிறது.
அதில் கலந்துகொண்டு உரையாற்றியபோது திரு ரேவன் குமார் இவ்விவரங்களைத் தெரிவித்தார்.
சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்கு அந்தத் தொழில்துறையினரும் அரசாங்க அமைப்புகளும் இணைந்து செயல்பட வேண்டிய தேவையைத் திரு ரேவன் குமார் வலியுறுத்தினார்.
ஏப்ரல் 3 முதல் 5 வரை நடக்கும் இந்த மூன்று நாள் கண்காட்சியானது ஜோகூர் சுற்றுலாத் துறையின் முக்கியத் தளமாக விளங்கி வருகிறது. அத்துடன், மலேசியச் சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்கும் நீடித்த நிலைத்தன்மைக்கும் அது ஆதரவளிக்கிறது.
தொடர்புடைய செய்திகள்
“இன்று, சுற்றுலாவானது உத்தரவாதம் சம்பந்தப்பட்டது; சரியான சேவை வழங்குநர்கள் மீதான நம்பிக்கையுடன் தொடர்புடையது. ‘மாட்டா’ அமைப்பைப் பொறுத்தமட்டில், சுற்றுப்பயணிகளுக்கும் எங்களது உரிமம் பெற்ற உறுப்பினர்களுக்கும் இடையில் நம்பிக்கையை வளர்ப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது,” என்று அவ்வமைப்பின் தலைவர் நைஜல் வோங் குறிப்பிட்டார்.
சுற்றுலாவைப் பொறுத்தவரை, மலேசியாவில் விரும்பத்தக்க இடமாக ஜோகூர் விளங்கி வருகிறது. சீனாவின் சிறப்பு ஆட்சிப் பகுதியான மக்காவ், அனைத்துலக அளவில் மிகவும் விரும்பத்தக்க இடம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

