சிங்கப்பூரில் நடந்த முதலீட்டாளர் சந்திப்பில் $1.5 பில்லியன் வாய்ப்பு: ஜோகூர் முதல்வர்

சிங்கப்பூரில் நடந்த முதலீட்டாளர் சந்திப்பில் $1.5 பில்லியன் வாய்ப்பு: ஜோகூர் முதல்வர்

2 mins read
6ab902ee-4a53-486e-9f93-45d5716361bc
ஜோகூர்- சிங்கப்பூர் சிறப்பு பொருளியல் மண்டலம் (JS-SEZ) அமைக்க இருநாடுகளும் 2025ல் இணக்கம் கண்டன. - படம்: பிஸ்னஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

ஜோகூர்பாரு: மலேசியாவின் ஜோகூர் மாநில முதல்வர் அண்மையில் சிங்கப்பூருக்கு மூன்றுநாள் வருகை தந்து பல முதலீட்டாளர்களுடன் சந்திப்புக் கூட்டங்களை நடத்தினார்.

அந்த சந்திப்புகளின் வழியாக அம்மாநிலத்துக்கு $1.5 பில்லியன் (மலேசிய ரிங்கிட் 5 பில்லியன்) வரையில் முதலீடுகளை ஈர்த்துள்ளதாக ஜோகூர் முதல்வர் ஒன் ஹஃபிஸ் காஸி அவரது ஃபேஸ்புக்கில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 21) பதிவிட்டுள்ளார்.

அதிவேக ஒளியியல் தொழில்நுட்பம், சுகாதாரத் தொழில்நுட்பம், பகுதிமின்கடத்தி உற்பத்திக்கான சாதனங்கள் ஆகியவற்றுக்கான முன்மொழிவுகளை அந்த முதலீடுகள் சார்ந்திருப்பதாக அவர் தெரிவித்தார்.

புதிய தொழில்நுட்பத்தையும் நிபுணர்களையும் வேலை வாய்ப்புகளையும் அந்த முதலீடுகள் ஜோகூர் மாநிலத்துக்கு வரவழைக்கும் வாய்ப்புள்ளது எனவும் அவர் கூறினார்.

மிகவும் அருகருகே அமைந்திருக்கும் அண்டை நாடுகளான சிங்கப்பூரும் மலேசியாவும் உயர்மட்ட தொழில்துறைகளை வரவழைக்கும் முயற்சியில் கூட்டாக செயல்பட்டுவருகின்றன. அதற்கு ஏதுவாக ஜோகூர் மாநிலம் முக்கிய முதலீடுகளுக்கான மையமாக வளர்ந்துவருவதை இந்த நடவடிக்கைகள் எடுத்துக்காட்டுகின்றன.

அதோடு இருநாடுகளுக்கும் இடையே சிறப்பு பொருளியல் மண்டலத்தை அமைக்க 2025ல் இணக்கம் காணப்பட்டது. அதன்படி அந்த மண்டலத்தை ஜோகூர் மாநிலத்தில் அமைக்க இரு தரப்பும் ஒப்புக்கொண்டன. மேலும் கடந்த ஆண்டு மலேசிய மாநிலங்களில் ஆக அதிக முதலீடுகளுக்கான இடமாக ஜோகூர் பெருமை பெற்றது.

முதலீட்டாளர்களின் முக்கியத் தேவையாக திறன்மிக்க ஊழியர்கள் இடம்பெறுகின்றனர். எனவே ஜோகூர் திறன் மேம்பாட்டு மன்றம் மூலமாக அம்மாநிலம் மனிதவளத்தை வளர்த்தெடுப்பதில் முன்னுரிமை காட்டுகிறது எனவும் முதல்வர் அவரது பதிவில் விளக்கினார்.

முதலீட்டாளர்களின் முன்மொழிவுகள் ஜோகூர் மீதான நம்பிக்கையை மறுவுறுதி செய்துள்ளது என்று அவர் கூறினார். வட்டார அளவில் முதலீடுகளின் மையமாக தமது மாநிலம் வளர்ந்து வருவதையும் இந்த பொருளியல் செயல்பாடுகள் முன்னிலைப்படுத்தியுள்ளதை அவர் குறிப்பிட்டார்.

உள்கட்டமைப்பும் தொழில்துறைக்கான வசதிகள் மட்டுமின்றி, பணிகளை நிறைவேற்றும் திறமைவாய்ந்த ஊழியர் அணியும் ஜோகூர் மாநிலத்தில் இருக்கும் என்ற நம்பிக்கையே இந்த முதலீடுகளுக்கான முக்கியக் காரணம் எனவும் திரு ஒன் காஸி தெரிவித்தார்.

முதலீடுகளுக்கான நடைமுறைகள் விரைவுப்படுத்தப்படும்

தொழில்துறைக்கு ஏற்ற வகையில் பயிற்சிகள் வடிவமைக்கப்பட்டு ஊழியர்களின் திறன்கள் மேம்படுத்தப்படவேண்டிய அவசியத்தை அவர் வலியுறுத்தினார். ஏனெனில் அவ்வாறு தயாராக இருந்தால்தான், முதலீட்டாளர்கள் வந்து சேர்ந்ததும் ஜோகூர் மக்கள் அவர்களால் உருவாக்கப்படும் தொழில்களில் உடனடியாக சேர்ந்துகொள்ளமுடியும் என்று அவர் கூறினார்.

அதேநேரத்தில் மலேசியாவில் முதலீடுகளுக்கான வசதிகளை ஏற்படுத்தித்தரும் ஜோகூர் அமைப்பு (IMFC-J) அவை சார்ந்த நடைமுறைகளை விரைவாக செயல்படுத்தும் எனவும் அவர் உறுதியளித்தார்.

குறிப்புச் சொற்கள்
பொருளியல்முதலீடுஜோகூர் பாருஜோகூர்சிறப்புப் பொருளியல் மண்டலம்முதல்வர்மாநில அரசுமாநிலம்அரசாங்கம்சிங்கப்பூர்