சிங்கப்பூருக்குக் கடத்தவிருந்த $4.3 மி. கடல் உணவைத் தடுத்த ஜோகூர் கடற்காவற்படை

சிங்கப்பூருக்குக் கடத்தவிருந்த $4.3 மி. கடல் உணவைத் தடுத்த ஜோகூர் கடற்காவற்படை

சட்டவிரோதமாக இயங்கிய படகுத்துறை சோதனையில் கடத்தல் முறியடிக்கப்பட்டது
படம்: பெர்னாமா

25 Apr 2026 - 8:31 pm

2 mins read

ஜோகூர் பாரு: ஜோகூர் பாருவில் ஏறத்தாழ $4.3 மில்லியன் (RM13.4 கோடி ரிங்கிட்) மதிப்பிலான கடல் உணவு வகையை (லாப்ஸ்டர் குஞ்சுகள்) கடல் வழியாக சிங்கப்பூருக்குக் கடத்த முயன்ற கும்பலின் திட்டத்தை மலேசியாவின் இரண்டாம் வட்டார கடற்காவல்படை வெற்றிகரமாக முறியடித்துள்ளது.

வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 24) மாலை 6.30 மணியளவில் தஞ்சோங் பெலுங்கோர் பகுதியில் உள்ள ஒரு சட்டவிரோதப் படகுத் துறையில் அதிரடிச் சோதனை நடந்தது.

ஜோகூர் கடல்சார் புலனாய்வுப் பிரிவு, மாநில மீன்வளத் துறையினர் ஆகிய இரு அமைப்புகளின் அதிகாரிகள் இணைந்து மேற்கொண்ட இந்தச் சோதனையில், அங்கு நிறுத்தப்பட்டிருந்த ‘இசுசூ’ ரக லாரி ஒன்றில் 124 வெள்ளை நிற ‘பாலிஸ்டிரீன்’ வகைப் பெட்டிகள் கைப்பற்றப்பட்டன.

அந்தப் பெட்டிகளுக்குள் பிளாஸ்டிக் பைகளில் அடைக்கப்பட்டிருந்த ஏறக்குறைய 671,600 இறால் இனத்தைச் சேர்ந்த லாப்ஸ்டர் குஞ்சுகள் இருந்ததை அதிகாரிகள் உறுதி செய்தனர்.

இது தொடர்பாக இரண்டாம் வட்டார கடற்காவற்படைத் தளபதி ஏசிபி நூர் அஸ்மான் ஜமால் வெளியிட்ட அறிக்கையில், முறையான ஏற்றுமதி ஆவணங்கள் இன்றி செயல்பட்ட 31 முதல் 57 வயதுடைய மூன்று உள்ளூர் ஆண்கள் கைது செய்யப்பட்டதாகத் தெரிவித்தார்.

கைப்பற்றப்பட்ட லாப்ஸ்டர் குஞ்சுகளின் மொத்த சந்தை மதிப்பு S$ 4.3 மில்லியன் (RM13.4 கோடி ரிங்கிட்) என மதிப்பிடப்பட்டது.

மலேசிய மீன்வளத்துறையில் விசாரணை தொடரும்

கைது செய்யப்பட்ட நபர்கள் உட்பட, பறிமுதல் செய்யப்பட்ட லாரி வாகனம் உள்ளிட்ட அனைத்தும் மேல் நடவடிக்கைக்காக மாநில மீன்வளத் துறை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.

தற்போது இதன் தொடர்பாக 1985-ஆம் ஆண்டு மீன்வளச் சட்டத்தின் பிரிவு 40-ன் கீழ் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குறிப்புச் சொற்கள்
கடத்தல்கடல்துறைகடலோரக் காவல்கைதுமீன்பிடிப்படகுபடகுலாரி