ஜோகூர் தேர்தல்: தயார்நிலையில் குடிநுழைவுத் துறை

ஜோகூர் தேர்தல்: தயார்நிலையில் குடிநுழைவுத் துறை

2 mins read
eeb4edf5-0b1f-487e-bd60-29faa51a1d03
நாட்டின் நுழைவாயில்களில் உள்ள சோதனை முறைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன என்று மலேசியக் குடிநுழைவுத் துறை தெரிவித்துள்ளது. - படம்: மலாய் மெயில்
multi-img1 of 2

ஜோகூர் பாரு: ஜோகூரின் 16வது மாநிலத் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்கள் சுமுகமாகத் திரும்புவதை உறுதிசெய்ய, அந்நாட்டின் குடிநுழைவுத் துறை அதன் தயார்நிலையை ஆக உயர்ந்த நிலைக்குத் தீவிரப்படுத்தியுள்ளது.

நாட்டின் நுழைவாயில்களில் உள்ள சோதனை முறைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

சுல்தான் அபு பக்கர் வளாகம், சுல்தான் இஸ்கந்தர் கட்டடம் ஆகியவற்றில் சோதனை முறைகள் வழக்கம்போல் இயங்கி வருவதாகக் குடிநுழைவுத் துறைத் தலைமை இயக்குநர் ஸக்காரியா ஷாபான் கூறினார்.

“எங்களது சோதனை முறை இப்போது சுமுகமாக இயங்கிவருகிறது. நாங்கள் தற்போது பயன்பாட்டில் உள்ள முறையையே தொடர்ந்து பயன்படுத்தி வருகிறோம். ஏதேனும் செயலிழப்பு ஏற்பட்டால், எங்கள் தொழில்நுட்பக் குழு உடனடியாக அதனைச் சரிசெய்யும்.

“சோதனை முறை செயலிழந்தால், குடிநுழைவு, சுங்க, தனிமைப்படுத்தும் வளாகங்களில் சோதனைகள் இடையூறின்றி தொடர்வதை உறுதிசெய்ய, மாற்று நடைமுறைகள் மேற்கொள்ளப்படும்,” என்று திங்கட்கிழமை (ஜூலை 6) பெர்னாமா செய்தி நிறுவனத்திடம் அவர் கூறினார்.

“சிங்கப்பூரில் உள்ள மலேசிய வாக்காளர்கள் எவ்விதச் சிரமமும் இன்றி தாயகம் திரும்பி தங்களின் கடமையை நிறைவேற்ற, வாக்களிப்பு நாளன்று பிரச்சினைகள் ஏற்படாமல் இருப்பதை நாம் உறுதிசெய்ய வேண்டும்,” என்றார் திரு ஸக்காரியா.

முன்னதாக, சிங்கப்பூரில் பணிபுரியும் வாக்காளர்கள் எளிதாகப் பயணம் செய்வதைத் தமது அமைச்சு உறுதி செய்யும் என்றும் ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டால் அதனைச் சமாளிப்பதற்கு விரிவான திட்டங்களைச் செயல்படுத்தும் என்றும் உள்துறை அமைச்சர் சைஃபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில் உறுதியளித்திருந்தார்.

‘ஜேபி சென்ட்ரல்’, உட்லண்ட்ஸ் ஆகிய பகுதிகளை இணைக்கும் சுல்தான் இஸ்கந்தர் கட்டடமும் தஞ்சோங் கூப்பாங்கில் அமைந்துள்ள சுல்தான் அபு பக்கர் வளாகமும் அன்றாடம் 300,000 பேர்வரை கையாளும் உலகின் மிகப் பரபரப்பான நுழைவாயில்களில் அடங்கும்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

ஜோகூர் மாநிலத் தேர்தலில் 56 இடங்களில் 172 வேட்பாளர்கள் களம் இறங்குகின்றனர். அதற்கான வாக்களிப்பு சனிக்கிழமை (ஜூலை 11) நடைபெறவுள்ள நிலையில், முன்கூட்டியே வாக்களிக்க ஜூலை 7ஆம் தேதிக்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
ஜோகூர்தேர்தல்தயார்நிலை