ஜோகூர்: நோன்புப் பெருநாள் வரும் சமயத்தில், ஜோகூரில் வெள்ளத்தால் 10,000க்கும் மேற்பட்டோர் தங்கள் இல்லங்களிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.
இதுபற்றிக் கூறும் ஜோகூர் பேரிடர் நிர்வாகக் குழு, வெள்ளிக்கிழமை (மார்ச் 21ஆம் தேதி) காலை 8.00 மணி நிலவரப்படி, 10,763 பேர் தங்கள் இல்லங்களிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறியது. இது அதற்கு முந்தைய 10 மணிநேர காலத்தில் வெளியேற்றப்பட்ட 5,092 பேரைவிட இரு மடங்குக்கும் மேலாகும் என்று தெரிவிக்கப்படுகிறது.
“இதில் 3,018 குடும்பங்களில் உள்ள பாதிக்கப்பட்டோர் ஜோகூர் பாரு, கோத்தா திங்கி, பொந்தியான், கூலாய் ஆகிய இடங்களில் உள்ள தற்காலிக வெள்ள நிவாரண முகாங்களில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
“மேலும், பாதிக்கப்பட்ட ஐந்து பகுதிகளில் மொத்தம் 98 தற்காலிக வெள்ள நிவாரண முகாம்கள் வெள்ளிக்கிழமை (மார்ச் 21ஆம் தேதி) காலை 8.00மணிக்கு திறக்கப்பட்டுள்ளன. இது வியாழக்கிழமை (மார்ச் 20ஆம் தேதி) இரவு 10.00 மணிக்கு இருந்த வெள்ள நிவாரண முகாம்களைவிட கூடுதலாக 79 முகாம்கள் ஆகும்,” என்று பேரிடர் நிர்வாகக் குழு தனது அறிக்கை வாயிலாக தெரிவித்தது.
இது குறித்து மேலும் விவரித்த குழு, ஜோகூர் பாருவில் இருந்துதான் மிக அதிகமானோர் தங்கள் இல்லங்களிலிருந்து வெளியேற்றப்பட்டதாக விளக்கியது. அங்கிருந்து தற்காலிக வெள்ள நிவாரண முகாம்களில் 4,291 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக குழு கூறியது.
இதற்கு அடுத்தபடியாக குளுவாங்கில் இருந்து 2,163 பேர், கோத்தா திங்கியில் இருந்து 1,762 பேர், பொந்தியானில் இருந்து 1,395 பேர், கூலாயில் இருந்து 1,152 பேர் முகாம்களுக்குச் சென்றுள்ளதாக அது தெளிவுபடுத்தியது.
மேலும், ஆறுகளில் ஓடும் நீரைக் கண்காணிக்கும் ஒன்பது மையங்கள் நீர் அளவு அபாயகரமான நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளன. அவை, சுங்கை லெனிக், சுங்கை காஹாங், சுங்கை சியாம், சுங்கை சிக்கு, சுங்கை பூலாய், சுங்கை ஸ்கூடாய், சுங்கை பாரிட் கெலிலிங், சுங்கை திராம், சுங்கை பாயா டத்தோ ஆகிய ஆறுகள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.