ஜோகூர் பாரு: சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையே போக்குவரத்துச் சேவை வழங்குவது குறித்து கிராப் நிறுவனத்திடம் ஜோகூர் மாநில அரசாங்கம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.
ஜோகூருக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான போக்குவரத்தை எளிமையாக்கும் முயற்சிகளில் இதுவும் ஒன்று ஜோகூர் மாநிலத்தின் முதலமைச்சர் ஓன் ஹபிஸ் காஸி தெரிவித்தார்.
கிராப் நிறுவனத்தின் மூத்த நிர்வாக அதிகாரிகளை அண்மையில் சந்தித்துப் பேசியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
போக்குவரத்தை எளிமையாக்கினால் ஜோகூரின் சுற்றுலாத்துறை கூடுதல் வளர்ச்சியடையும் என்று திரு காஸி கூறினார். விசிட் ஜோகூர் 2026 (Visit Johor Year 2026) திட்டத்தை மேம்படுத்த இது உதவும் என்று நம்பப்படுகிறது.
மலேசியா மற்றும் சிங்கப்பூர் போக்குவரத்து அமைச்சுகளை உள்ளடக்கிய எல்லை தாண்டிய போக்குவரத்துத் திட்டம், இரு நாடுகளுக்கும் இடையிலான பயணத்தை எளிதாக்குவதில் கிராப் மற்றும் பிற பொதுப் போக்குவரத்து அமைப்புகளின் பங்குகள் ஆகியவை குறித்து அண்மையில் நடந்த சந்திப்பில் பேசப்பட்டது என்று திரு காஸி கூறினார்.
ஜோகூருக்கு சுற்றுலாப் பயணிகளை அடிக்கடி வரவைக்கும் திட்டங்கள் குறித்தும் திரு காஸி பேசினார்.
“சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதன் மூலம் உள்ளூரில் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும். இதனால் ஜோகூரின் பொருளியல் முன்னேறும். மேலும் ஜோகூர் மாநிலம் வெளிப்படையான நல்ல வரவேற்புடைய இடம் என உலகிற்கு எடுத்துக்காட்டப்படும்,” என்றார் திரு காஸி.