இஸ்கந்தர் புத்ரி: ஜோகூர் - சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டலத்தின் ஒரு பகுதியாக ‘ஃபார்ஸ்ட் சிட்டி’ சிறப்பு நிதி மண்டலத்தை அமைப்பது குறித்து ஜோகூர் அரசாங்கம் ஆராய்ந்துவருகிறது.
அந்தப் பரிந்துரை அரசாங்கத்தில் கலந்து ஆலோசிக்கப்பட்டுள்ளது என்றும் அது ஜோகூர் - சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டலப் பணிக்குழுவுக்கு அனுப்பப்படும் என்றும் ஜோகூர் மாநில முதலீட்டு, வர்த்தக விவகாரங்கள், மனிதவள குழுத் தலைவர் லீ டிங் ஹான் கூறினார்.
2016ஆம் ஆண்டில் வரையப்பட்ட ‘ஃபாரஸ்ட் சிட்டி’ பெருந்திட்டத்தின் அடிப்படையில், மருத்துவம், சுற்றுப்பயணம், கல்வி, சொத்துச் சந்தை, வரியில்லா (டியூட்டி ஃபிரீ) பகுதி ஆகியவற்றுக்கு அந்த இடத்தை ஒருங்கிணைந்த பகுதியாக அமைப்பதே நோக்கம் என்றார் அவர்.
“இந்த ஆண்டு மத்திய அரசாங்கத்தின் உதவியோடு, ‘ஃபாரஸ்ட் சிட்டி’இன் ‘புலாவ் சத்து’வை வரியில்லாத் தீவாக மாற்றியமைப்பதற்கான திருத்த மசோதாவை நாங்கள் பெற்றோம்,” என்று அவர் கூறினார்.
“ஃபாரஸ்ட் சிட்டியின் சிறப்பு நிதி மண்டலம் குறித்து பிரதமர் அன்வார் இப்ராகிம் ஓராண்டுக்கு முன்னர் அறிவித்தார். அப்போதிலிருந்து அது தொடர்பான பணிகள் நடைபெற்று வருகின்றன,” என்று திரு லீ அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
ஜோகூருக்கு நேரடி வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில் போட்டித்தன்மைச் சார்ந்த மேம்பாடுகளை ஏற்படுத்த, ஃபாரஸ்ட் சிட்டியின் சிறப்பு நிதி மண்டலம், ஜோகூர் - சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டலத்தின்கீழ் அமைவதற்கான சாத்தியம் குறித்து அவர் கருத்துத் தெரிவித்திருந்தார்.
‘ஃபாரஸ்ட் சிட்டி’ அதன் உத்திபூர்வ அமைவிடம் காரணமாக சிறப்பு நிதி மண்டலமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாகத் திரு லீ கூறினார்.
“இந்த வட்டாரத்தில் அனைத்துலக நிதி, தளவாட நடுவமாகத் திகழும் சிங்கப்பூருக்கு ‘ஃபாரஸ்ட் சிட்டி’ அருகாமையில் இருப்பதால், சிங்கப்பூருக்குப் பங்களிக்கும் வகையில் அது ஒரு கூடுதல் நன்மை.
தொடர்புடைய செய்திகள்
“பாரஸ்ட் சிட்டியின் சிறப்பு நிதி மண்டலத்திற்குள் முதலீட்டாளர்களை ஈர்க்க உதவிசெய்வதில் நாம் கவனம் செலுத்துவோம்,” என்று திரு லீ கூறினார்.
அதோடு, திறனாளர்கள், இணைப்பு போன்ற உள்ளமைப்புகள் தேவைப்படுவதாகவும் அவர் சொன்னார்.
அத்தகைய நடவடிக்கை சிங்கப்பூரின் நிதித் துறைக்கு மேலும் துணைபுரியும் என்றும் பாரஸ்ட் சிட்டியின் சிறப்பு நிதி மண்டலத்தின் வழி, ஜோகூரில் புதிய துறையை உருவாக்க அரசாங்கத்திற்கு வாய்ப்பு கிடைக்கும் என்றும் திரு லீ கூறினார்.