இஸ்கந்தர் புத்ரி: இந்தோனீசியர்களிடையே, குறிப்பாக மருத்துவம் சார்ந்த பயணங்களுக்கு, ஜோகூர் மென்மேலும் பிரபலச் சுற்றுப்பயண இடமாக உருவெடுத்துள்ளது.
சென்ற ஆண்டு அந்த மாநிலத்திற்குச் சென்ற 127,000 அனைத்துலக நோயாளிகளில் 79 விழுக்காட்டினர் இந்தோனீசியாவைச் சேர்ந்தவர்கள். இரு அண்டை நாடுகளுக்கும் இடையிலான வலுவான சுற்றுப்பயண உறவை ஜோகூர் பாருவுக்கான இந்தோனீசியத் தலைமைத் தூதர் சிகித் சுரியான்தோரோ விதியாந்தோ சுட்டினார்.
கடந்த ஆண்டு கிட்டத்தட்ட 1.5 மில்லியன் இந்தோனீசியர்கள் ஜோகூருக்குச் சென்றதாக அவர் தெரிவித்தார்.
இஸ்கந்தர் புத்ரியிலுள்ள புத்ரி துறைமுக அனைத்துலகப் படகு முனையத்தையும், பாத்தாமின் பெங்கோங்கில் உள்ள கோல்ட் கோஸ்ட் படகு முனையத்தையும் இணைக்கும் வகையில் புதிதாகத் தொடங்கப்பட்ட படகுச் சேவை உள்ளிட்ட மேம்பட்ட போக்குவரத்து இணைப்புகள், எல்லை தாண்டிய பயணத்தை மேலும் வலுப்படுத்தும் என்று அவர் கூறினார்.
அந்தப் புதிய வழித்தடம், குறிப்பாகச் சுற்றுப்பயணத் துறையில் மேம்பாடு காணும் மேற்கு பாத்தாம் பகுதிக்குச் செல்வோர் உட்பட அனைத்துப் பயணிகளுக்கும் கூடுதல் தெரிவை வழங்கும் என்று சிகித் தெரிவித்தார்.
“ஜோகூரைச் சேர்ந்தவர்கள் பாத்தாமுக்குச் செல்வதற்கு இது மற்றொரு தெரிவாக அமைகிறது. அதேபோல், பாத்தாமிலிருந்து ஜோகூருக்கு செல்லும் சுற்றுப்பயணிகள் ‘ஜோகூர் பிரிமியம் அவுட்லெட்ஸ்’, ‘லெகோலேண்ட்’ போன்ற இடங்களை எளிதாகச் சென்றடைய முடியும்.
“இது நிச்சயமாகப் புதிய வாய்ப்புகளைத் திறந்துவிடும்,” என்று ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 1) புத்ரி துறைமுக அனைத்துலகப் படகு முனையத்தில் நடைபெற்ற படகுச் சேவைத் தொடக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு அவர் கூறினார்.
