ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டலத்துக்கான இடங்கள் குறித்த ஜோகூரின் முன்மொழிவு

ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டலத்துக்கான இடங்கள் குறித்த ஜோகூரின் முன்மொழிவு

2 mins read
7c38cb51-1f49-4c10-88c3-b86861b72b67
சிறப்புப் பொருளியல் மண்டலம் குறித்த கலந்துரையாடலை மாநில அரசாங்கமும், பொருளியல் அமைச்சும் ஜூன் மாதத் தொடக்கத்தில் ஏற்பாடு செய்யும் என்று திரு ஒன் ஹஃபிஸ் கூறினார்.  - படம்: தி ஸ்டார்

இஸ்கந்தர் புத்ரி: ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டலத்தை, இஸ்கந்தர் மலேசியா வட்டாரத்திலும் ‘பெங்கராங்’ எனும் இடத்திலும் அமைக்க ஜோகூர் முன்மொழிந்துள்ளதாக அம்மாநில முதலமைச்சர் ஒன் ஹஃபிஸ் காஸி தெரிவித்துள்ளார்.

அது 3,505 சதுரக் கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது என்றும் அதில் ஜோகூர் பாரு, இஸ்கந்தர் புத்ரி, பாசிர் குடாங், குலாய், பொந்தியான், பெங்கராங் ஆகிய ஆறு உள்ளூர் மன்றங்கள் சம்பந்தப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.

மலேசியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையே கடந்த ஜனவரி 11ஆம் தேதி புரிந்துணர்வுக் குறிப்பு கையெழுத்தானதிலிருந்து, மத்திய, மாநிலத் துறைகளும் அமைப்புகளும் சம்பந்தப்பட்ட மொத்தம் எட்டு பணிக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

நிர்வாகம், பொருளியல் துறை, வரி, ஊக்குவிப்புகள், திறன், உள்ளமைப்பு உள்ளிட்ட அம்சங்களை அந்தப் பணிக்குழுக்கள் கையாளும் என்றார் அவர்.

சிறப்புப் பொருளியல் மண்டலம் குறித்த கலந்துரையாடலை மாநில அரசாங்கமும், பொருளியல் அமைச்சும் ஜூன் மாதத் தொடக்கத்தில் ஏற்பாடு செய்யும் என்று திரு ஒன் ஹஃபிஸ் கூறினார்.

ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டலம், மக்களுக்குப் பயனளிப்பதை உறுதிசெய்ய, அனைத்து மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்களும் சமூகத் தலைவர்களும் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்க இது ஒரு தளமாக அமையும் என்று அவர் சொன்னார்.

“இரு நாடுகளுக்கும் இடையிலான அதிகாரபூர்வ கலந்துரையாடல் அடுத்த மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டலத்துக்கான ஒப்பந்தம் இவ்வாண்டு இறுதிக்குள் நிறைவுசெய்யப்பட்டு, கையெழுத்தாவதை உறுதிசெய்வதில் ஜோகூரும் மத்திய அரசாங்கமும் கடப்பாடு கொண்டுள்ளன,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்