தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

40,000 இந்தியக் குடும்பங்களுக்கு $1.51 மில்லியன் மதிப்புள்ள உணவுக் கூடைகள்

2 mins read
5c2ecf57-aeb6-4ba7-8f24-88522c1d9f34
ஜோகூர் லிட்டில் இந்தியாவில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 12 தீபாவளிச் சந்தையை அதிகாரபூர்வமாகத் தொடங்கி வைத்த ஜோகூர் முதலமைச்சர் ஒன் ஹஃபிஸ் காஸி கடைக்காரர்கள், பொது மக்களுடன் உரையாடினார். - படம்: பெர்னாமா
multi-img1 of 2

ஜோகூர் பாரு: தீபாவளியை முன்னிட்டு ஏறக்குறைய 4.9 மில்லியன் ரிங்கிட் (S$1.51 மில்லியன்) மதிப்புள்ள உணவுக் கூடைகளை ஜோகூர் முழுவதும் உள்ள 40,000 இந்தியக் குடும்பங்களுக்கு அம்மாநில அரசு வழங்க உள்ளது.

முதல் முறையாக முன்னெடுக்கப்படும் இந்தத் திட்டம், இந்திய சமூகத்தின் நல்வாழ்வைத் தொடர்ந்து உறுதிப்படுத்துவதில் மாநில அரசாங்கம் கொண்டுள்ள உறுதிப்பாட்டை நிரூபிக்கிறது என்று ஜோகூர் முதலமைச்சர் ஒன் ஹஃபிஸ் காஸி கூறினார்.

ஜோகூரில் உள்ள லிட்டில் இந்தியாவில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 12 தீபாவளிச் சந்தையை அதிகாரபூர்வமாகத் தொடங்கி வைத்த அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

“இவ்வாண்டு தீபாவளிக்கு ஜோகூரில் உள்ள ஒவ்வொரு இந்தியக் குடும்பமும் உணவுக் கூடையைப் பெறும். இந்திய சமூகத்தினர் மீது மாநில அரசாங்கம் கொண்டுள்ள அன்பின் அடையாளமாக இதுபோன்ற முயற்சியை முதல் முறையாக அரசாங்கம் செயல்படுத்துகிறது,” என்றார் அவர்.

மாநில அரசாங்கத்தின் ஒற்றுமை, அனைவரையும் உள்ளடக்கும் தன்மையையும் இந்த முயற்சி பிரதிபலிக்கிறது என்று அவர் சொன்னார்.

ஜோகூர் முழுவதும் உள்ள இந்தியக் குடும்பங்களுக்கு, குறிப்பாகக் குறைந்த வருமானக் குடும்பங்களுக்கு உணவுக் கூடைகள் விநியோகிக்கப்படும் என்றார் மாநில ஒற்றுமை, மரபுடைமை, கலாசாரக் குழுத் தலைவர் கே. ராவன்குமார்.

ஒவ்வொரு உணவுக் கூடையும் 100 ரிங்கிட்டுக்கும் அதிக மதிப்புள்ள, அரிசி, சமையல் எண்ணெய், மாவு, புடவை, கறி மசாலா போன்ற அத்தியாவசியப் பொருள்களைக் கொண்டிருக்கும்.

மாநிலம் முழுவதும் உள்ள 56 சமூக சேவை மையங்கள் மூலம் கூடைகள் விநியோகிக்கப்படுவதாகவும், இந்த வாரத்திற்குள் இந்தப் பணி நிறைவுபெறும் என்றும் டெங்காரோ சட்டமன்ற உறுப்பினருமான ராவன் குமார் கூறினார்.

குறிப்புச் சொற்கள்