கோலாலம்பூர்: ஜோகூர் - சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டலம் 2025ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் 68 பில்லியன் மலேசிய ரிங்கிட் (S$21.96 பில்லியன்) முதலீட்டை ஈர்த்துள்ளதாக மலேசியப் பொருளியல் அமைச்சர் அக்மல் நஸ்ருல்லா முகமட் நசீர் தெரிவித்துள்ளார்.
ஆரம்ப கணிப்புகளை குறிப்பிடத்தக்க வகையில் இது மிஞ்சியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
மலேசிய முதலீட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (எம்ஐடிஏ) 2025ன் மூன்றாம் ஆண்டின் முதலீட்டு செயல்திறன் அறிக்கையின் அடிப்படையில் 2025ன் முதல் ஒன்பது மாதங்களில் அங்கீகரிக்கப்பட்ட 68 பில்லியன் ரிங்கிட் முதலீட்டை இந்த மண்டலம் ஈர்த்துள்ளது.
அதே காலகட்டத்தில் ஜோகூரின் மொத்த அங்கீகரிக்கப்பட்ட முதலீடுகளில் 75 விழுக்காடு.
2025ஆம் ஆண்டிற்கான முழு ஆண்டு அங்கீகரிக்கப்பட்ட முதலீட்டு அளவு மார்ச் மாதம் அறிவிக்கப்படும்.
ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டல முதலீட்டு வழிகாட்டுதலும் பெருந்திட்டமும் மார்ச் மாதம் வெளியிடப்படும்.
இது, வளர்ச்சிக்கு வழிகாட்டவும், பங்குதாரர்களிடையே ஒருங்கிணைப்பை வலுப்படுத்தவும், முன்னுரிமைத் துறைகள், உள்கட்டமைப்பு, செயலாக்கம் ஆகியவற்றில் முதலீட்டாளர்களுக்கு அதிக தெளிவை வழங்கும் என்று என்று மலேசியப் பொருளியல் கருத்தரங்கு 2026ஐ வியாழக்கிழமை (பிப்ரவரி 5) தொடங்கி வைத்துப் பேசிய அமைச்சர் அக்மல் கூறினார்.
ஒட்டுமொத்தமாக, ஜோகூர் - சிங்கப்பூர் சிறப்பு பொருளியல் மண்டலம் உயர் மதிப்பு முதலீடுகளுக்கும் மலேசியர்களுக்கு சிறந்த தரமான வேலைகளின் உருவாக்கத்துக்கும் முக்கிய உந்துதலாக உருவாகி வருகிறது என்ற நம்பிக்கையை வலுப்படுத்துகிறது என்று திரு அக்மல் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
கொள்கை உருவாக்கத்திலிருந்து செயலாக்கத்திற்கு மலேசியா தீர்க்கமாக நகர்கிறது. பொருளியல் முன்னேற்றம் என்பது அறிவிப்புகளால் அன்றி, விளைவுகளைக் கொண்டு அடித்தளத்தில் தீர்மானிக்கப்பட வேண்டும் என்றார் அவர்.
அதிக மதிப்புள்ள முதலீடுகளை ஈர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஜோகூர் - சிங்கப்பூர் சிறப்பு பொருளியல் மண்டலம் போன்ற பிரதான, நாட்டை உருவாக்கும் திட்டங்களையும் அரசாங்கம் தொடர்ந்து முன்னெடுப்பதை அவர் சுட்டினார்.
கடந்த 2025ல் மலேசியப் பொருளியல் 4.9 விழுக்காடு வளர்ச்சி கண்டதை முன்னோட்ட கணிப்புகள் காட்டுகின்றன. இது சேவைத்துறை, உற்பத்தி, கட்டுமானத் துறைகளின் மீள்திறனைப் பிரதிபலிக்கிறது என்றார் திரு அக்மல்.
2024ல் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 4.1 விழுக்காடாக இருந்த வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறை, 2025ல் 3.8 விழுக்காடாகக் குறைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், நிதிச் செயல்பாடு தொடர்ந்து சிறப்பாக இருப்பதாக அவர் கூறினார்.

