புத்ராஜெயா: ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டலத்தின் பெருந்திட்டம் மற்றும் முதலீட்டு வரைவுத் திட்டம் ஆகியவற்றை தமது அமைச்சு தீர்மானிக்கப்படுவதாகவும் இது மார்ச் மாதம் 30ஆம் தேதியன்று வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் மலேசியப் பொருளியல் அமைச்சர் அக்மல் நஸ்ருல்லா முகம்மது நாசர் தெரிவித்துள்ளார்.
இந்த வரைவுத் திட்டம் பொதுமக்களின் பார்வைக்கானது என்றும் விரிவான பெருந்திட்டம் அனைத்து தரப்பினருக்குமான வழிகாட்டியாக அமையும் என்றும் அவர் கூறினார்.
“நாங்கள் வரைவுத் திட்டம் மற்றும் முதன்மைத் திட்டத்தை தீர்மானித்து வருகிறோம். மார்ச் மாதம் 30ஆம் தேதியன்று ஜோகூர் பாருவில் இதனைத் தொடங்க இணங்கியுள்ளோம்,” என்று வியாழக்கிழமை (மார்ச் 12) MyRMK முறையைத் தொடங்கி வைத்தபோது அமைச்சர் அக்மல் கூறினார்.
இந்தத் தொடக்க விழாவில் ஜோகூர் மாநில அரசும், சிங்கப்பூரின் சில அமைச்சர்களும் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டலம் என்பது மலேசியா மற்றும் சிங்கப்பூர் இடையிலான ஓர் உத்திபூர்வ ஒத்துழைப்பு முயற்சியாகும். இது பொருளியல் ஒருமைப்பாட்டை வலுப்படுத்தவும் புதிய முதலீடுகளை ஈர்க்கவும் மற்றும் மலேசியாவின் தெற்குப் பகுதியில் பொருளியல் வளர்ச்சியைத் தூண்டவும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஜோகூர் மாநிலத்தின் பொருளியல் சூழலை உருமாற்றி, 2030ஆம் ஆண்டிற்குள் 260 பில்லியன் ரிங்கிட் மொத்த உள்நாட்டு உற்பத்தியைஎட்டுவதும், 20,000க்கும் மேற்பட்ட உயர் திறன் கொண்ட வேலை வாய்ப்புகளை உருவாக்குவதும் இதன் முக்கிய இலக்குகளில் அடங்கும்.
இதற்கிடையே, தற்போதைய இலக்குகளில் ஏதேனும் மாற்றங்கள் தேவையா என்பதை தீர்மானிக்க, மலேசியாவின் பொருளியல் வளர்ச்சியை பேங்க் நெகாரா மலேசியா தொடர்ந்து ஆய்வு செய்யும் என்று அமைச்சர் அக்மல் கூறினார்.
தொடர்ந்து வரும் புவிசார் அரசியல் சவால்கள் மற்றும் வெளிப்புற நிச்சயமற்ற நிலைகள் இருந்தபோதிலும், இந்த ஆண்டிற்கான நாட்டின் பொருளியல் வளர்ச்சி கணிப்பை 4 விழுக்காடு முதல் 4.5 விழுக்காடு வரை அரசாங்கம் தற்போது பராமரித்து வருவதாக அவர் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
2026ஆம் ஆண்டில் புவிசார் அரசியல் சூழல் ஒரு முதன்மை சவாலாகத் தொடர்ந்தாலும், 2025ஆம் ஆண்டில் நாட்டின் பொருளியல் செயல்பாடு அதன் அடிப்படை மீள்திறனை நிரூபித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்

