தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஜோகூரில் 140 வெள்ள அபாயப் பகுதிகள் சரிசெய்யப்பட்டு விட்டன

2 mins read
76b52a33-3f36-4cc1-9c81-dea95555dc5a
ஜோகூரில் வெள்ளம் ஏற்படும் கிட்டத்தட்ட 70 விழுக்காடு பகுதிகள் சரிசெய்யப்பட்டு விட்டன. - படம்: த ஸ்டார்

ஜோகூர் பாரு: ஜோகூர் மாநிலத்தில் வெள்ள நிவாரணப் பணிகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஜோகூர் மாநில வீடமைப்பு, உள்ளூர் அரசாங்க ஆட்சிக் குழுத் தலைவர் முகமது ஜாஃப்னி முகமது ஷுக்கோர் தெரிவித்துள்ளார்.

இதில் 140 வெள்ள அபாயப் பகுதிகள் $91 மில்லியன் செலவில் மேம்படுத்தப்பட்டுள்ளதாக திரு முகம்மது ஜாஃப்னி விளக்கினார்.

அத்துடன், கனமழை நீர் வடிகால்களின் மேம்பாடு, புதிதாக நீர் சேமிப்புக் குளங்கள் அமைப்பது, நீர் தடுப்புச் சுவர்களை வலுப்படுத்துவது என 70 விழுக்காடு பணிகள் நிறைவு பெற்றுவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

“2026ஆம் ஆண்டு நான்காம் காலாண்டிற்குள் ஜோகூரில் உள்ள 16 உள்ளாட்சி மன்றங்களில் உள்ள அனைத்து வெள்ள அபாயப் பகுதிகளும் சரிசெய்ய திட்டமிடப்பட்டுள்ளன,” என்று திரு முகமது ஜாஃப்னி ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 28) கூறினார்.

மேலும், 10க்கு மேற்பட்ட பகுதிகளில் வெள்ள நீர் உடனுக்கு உடன் கண்காணிக்கும் விதமாக உள்கட்டமைப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருப்பதாகவும் ஜோகூரின் புக்கிட் பெர்மாய் சட்டமன்ற உறுப்பினருமான திரு முகமது ஜாஃப்னி தெரிவித்தார்.

“பருவமழைக் காலம் நெருங்கி வரும் நேரத்தில் இந்தத் திட்டங்கள் யாவும் முக்கியமானவை,” என்று அவர் விளக்கினார்.

இந்தத் திட்டங்கள் தொடர்பாக ஜோகூர் மாநில அரசு கடந்த 2023ஆம் ஆண்டிலிருந்தே பணிகள் மேற்கொண்டு வருவதாக தெளிவுபடுத்திய திரு முகமது ஜாஃப்னி திடீர் வெள்ளம் ஏற்படும் பகுதிகளைக் குறிவைத்து அராசங்கம் செயல்பட்டு வருவதாகச் சொன்னார்.

“ஜோகூரில் வெள்ளம் மிகப் பெரிய சவாலாக உள்ளது. தொடர் மேம்பாட்டுப் பணிகள், தடுப்பு நடவடிக்கைகள் மூலம் மக்கள் தங்களின் சொத்துகளில் ஏற்படும் வெள்ள பாதிப்பைக் குறைக்க முடியும்,” என்று நம்பிக்கையுடன் கூறினார் திரு முகமது ஜாஃப்னி.

ஜோகூர் மாநில வெள்ள நிவாரண நடவடிக்கைகள் மத்திய அரசின் நீர் வடிகால், நீர்ப்பாசனத் திட்டங்களுக்கு இணையாகச் செயல்படுத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்