ஜோகூர் பாரு: ஜோகூர் விலங்கியல் தோட்டம், மலேசியாவிலேயே பழமையான விலங்கியல் தோட்டமாகும். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, அத்தோட்டம் அந்நாட்டின் சுதந்திர தினமான ஆகஸ்ட் 31ஆம் தேதி மீண்டும் பொதுமக்களுக்குத் திறந்துவிடப்படும் என ஜோகூர் முதல்வர் ஒன் ஹஃபிஸ் காஸி கூறினார்.
மேலும், அந்த விலங்கியல் தோட்டத்தை அதிகாரபூர்வமாக ஆகஸ்ட் 28ஆம் தேதி ஜோகூர் ஆட்சியாளர் இஸ்மாயில் சுல்தான் இப்ராகிம் திறந்து வைப்பார் என்றும் மூன்று நாள்களுக்குப் பிறகு பொதுமக்களின் வருகைக்காக மீண்டும் அது திறக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
தோட்டத்தின் நுழைவுச்சீட்டுக் கட்டணத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.
உள்ளூர்வாசிகளுக்கான புதிய நுழைவுச்சீட்டுக் கட்டணம் பெரியவர்களுக்கு 10 ரிங்கிட் (S$3) என்றும் குழந்தைகளுக்கு 5 ரிங்கிட் என்றும் ஜோகூர் மாநில அரசு நிர்ணயித்திருக்கிறது என்றார் ஜோகூர் முதலமைச்சர்.
“இருப்பினும், வெளிநாட்டினருக்கான நுழைவுச்சீட்டுக் கட்டணம் 30 ரிங்கிட்டாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது,” என்று அவர் ஆகஸ்ட் 16ஆம் தேதி ஜோகூர் விலங்குத் தோட்டத்தைப் பார்வையிட்ட பிறகு கூறினார்.
திறப்பு விழாவை முன்னிட்டு மலேசியருக்கு 50 விழுக்காடு நுழைவுச்சீட்டுக் கட்டணத்தில் சலுகை அளிக்கப்பட்டுள்ளதாகவும் இந்தச் சலுகையை ஆகஸ்ட் 31ஆம் தேதித் தொடங்கி ஒரு மாதத்திற்கு அவர்கள் அனுபவிக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

