ஜகார்த்தா: இந்தோனீசியாவின் அரசு ஊழியர்களை அந்நாட்டின் புதிய தலைநகரான நுசந்தாராவுக்கு இடமாற்றும் திட்டம் ஒத்திவைக்கப்படக்கூடும் என்று அந்நாட்டின் அதிபர் ஜோக்கோ விடோடோ தெரிவித்துள்ளார்.
இந்தோனீசியாவின் தலைநகராக நுசந்தாரா முழுவீச்சில் செயல்பட, அதற்குத் தேவையான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஆனால் நிர்ணயிக்கப்பட்ட தேதிக்குள் அவை நிறைவடையாது என்ற சந்தேகம் மேலோங்கி இருக்கிறது.
அதற்குத் தேவையான நிதியைத் திரட்டுவதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
செப்டம்பர் மாதத்தில் 10,000க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் அங்கிருந்து செயல்படுவர் என்று முதலில் திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால் பணிகள் இன்னும் முடியாததால், அது சாத்தியமாகாது என்று பரவலாகப் பேசப்படுகிறது.
இருப்பினும், செப்டம்பர் மாதத்தில் அரசு ஊழியர்களை அங்கு அனுப்பும் இலக்கை திரு விடோடோ இன்னும் கைவிடவில்லை. ஆனால் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்தால் மட்டுமே அவர்கள் அங்கு அனுப்பிவைக்கப்படுவர் என்று ஆகஸ்ட் 14ஆம் தேதியன்று செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.
தலைநகராகச் செயல்பட நுசந்தாரா இன்னும் தயாராகாவிடில் இத்திட்டம் ஒத்திவைக்கப்படும் என்றார் அதிபர் விடோடோ.
தொடர்புடைய செய்திகள்
இந்தோனீசியாவின் புதிய தலைநகரமான நுசந்தாரா, போர்னியோ தீவில் உள்ளது.
தற்போதைய தலைநகர் ஜகார்த்தாவுக்கு வடகிழக்குப் பகுதியில் அது இருக்கிறது.
நுசந்தாராவுக்கும் ஜகார்த்தாவுக்கும் இடையிலான தூரம் 1,000 கிலோ மீட்டருக்கு அதிகம்.
ஜகார்த்தாவில் மக்கள்தொகை அளவுக்கு அதிகமாக இருப்பதால், நெரிசலைக் குறைக்கும் வகையில் தலைநகரை நுசந்தாராவுக்கு மாற்ற முடிவெடுக்கப்பட்டது.
இந்நிலையில், வரும் அக்டோபர் மாதத்தில் இந்தோனீசியாவின் புதிய அதிபராக திரு பிரபோவோ சுபியாந்தோ பொறுப்பேற்க இருக்கிறார்.
நுசந்தாராவைப் புதிய தலைநகராக மாற்றுவதில் கடப்பாடு கொண்டுள்ளதாக திரு பிரபோவோ அண்மையில் தெரிவித்தார். அதற்குத் தேவையான பணிகளை நிறைவேற்ற இலக்கு கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மேம்பாட்டுப் பணிகளை விரைவுப்படுத்த திரு பிரபோவோ விரும்புவதாக அதிபர் விடோடோ தெரிவித்தார்.
“நுசந்தாரா முழுமையாக மேம்பட 10லிருந்து 20 ஆண்டுகள் ஆகும் என்று திரு பிரபோவோவிடம் கூறினேன். அதற்குப் பதிலளித்த திரு பிரபோவோ, நான்கிலிருந்து ஆறு ஆண்டுகளுக்குள் புதிய தலைநகரை முழுமையாக மேம்படுத்திவிட வேண்டும் என்று தெரிவித்தார். அது அவரது கையில் உள்ளது,” என்றார் அதிபர் விடோடோ.