ஜோர்தான், எகிப்து கூடுதலான காஸா பாலஸ்தீனர்களை ஏற்க வேண்டும்: டிரம்ப்

2 mins read
98be94cb-71f8-459b-b365-e9b56f4e79ec
வட காஸாவில் உள்ள தங்கள் வீடுகளுக்குத் திரும்பக் காத்திருக்கும், போர் நிறுத்த ஒப்பந்தத்தின்கீழ் இஸ்ரேலிய சிறைகளிலிருந்து விடுவிக்கப்பட்ட பாலஸ்தீனர்கள் - படம்: இபிஏ

வா‌ஷிங்டன்: ஜோர்தானும் எகிப்தும் காஸாவில் வசித்த பாலஸ்தீனர்களைக் கூடுதலாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டேன்ல்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

ஹமாஸ்-இஸ்ரேல் போரால் காஸாவில் மனிதாபிமான நெருக்கடி ஏற்பட்டிருப்பதைத் தொடர்ந்து திரு டிரம்ப் அவ்வாறு சொன்னார். தமது பரிந்துரை குறுகிய காலத்துக்கானதா அல்லது நீண்ட காலத்துக்கானதா என்று கேட்கப்பட்டதற்கு திரு டிரம்ப், “எதுவாகவும் இருக்கலாம்,” என பதிலளித்தார்.

பாலஸ்தீனர்கள் பலவந்தமாக வீடுகளிலிருந்து வெளியேற்றப்படுவதைத் தாங்கள் எதிர்ப்பதாக வா‌ஷிங்டன் சென்ற ஆண்டு கூறியிருந்தது.

காஸாவின் நிலை குறித்து மனித உரிமைக் குழுக்களும் மனிதாபிமான அமைப்புகளும் பல மாதங்களாக கவலை தெரிவித்து வந்துள்ளன. போரால் அப்பகுதியில் வசித்த கிட்டத்தட்ட அனைவருமே வீடுகளிலிருந்து வெளியேற நேரிட்டது. அதனால் உணவின்றி பலர் பசியால் அவதிப்படும் நிலை உருவாகியுள்ளது.

இஸ்ரேலுக்கு ஆதரவு தருவதையொட்டி வா‌ஷிங்டன் கண்டனத்துக்கு உள்ளாகியிருக்கிறது. ஆனால், தனது பங்காளியான இஸ்ரேலுக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது.

ஈரானின் ஆதரவுடன் செயல்படும் ஹமாஸ் அமைப்பு, லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பு, ஏமனின் ஹூதி அமைப்பு ஆகியவற்றுக்கு எதிராகத் தற்காத்துக்கொள்ளத் தாங்கள் இஸ்ரேலுக்கு உதவுவதாக அமெரிக்கா கூறி வருகிறது.

“இப்போது நான் காஸா பகுதியைப் பார்க்கும்போது அது பெரிய அளவில் களேபரத்தில் இருப்பது தெரிகிறது. அதனால் கூடுதலானோரை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்புவதாக அவரிடம் சொன்னேன்,” என்று திரு டிரம்ப், சனிக்கிழமையன்று (ஜனவரி 25) ஜோர்தானின் இரண்டாவது அப்துல்லா மன்னருடன் நடந்த தொலைபேசி உரையாடல் பற்றித் தெரிவித்தார்.

“எகிப்து (காஸா) மக்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது எனது விருப்பம்,” என்றும் திரு டிரம்ப் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார். ஞாயிற்றுக்கிழமையன்று (ஜனவரி 26) எகிப்து அதிபர் அப்தெல் ஸ்ரீபட்டா அல்-சிசியுன் தாம் பேசப்போவதாகவும் திரு டிரம்ப் தெரிவித்தார்.

“நாம் ஒன்றரை மில்லியன் மக்களின் வாழ்க்கையைப் பற்றிப் பேசுகிறோம்,” என்றும் அவர் எடுத்துரைத்தார்.

காஸா போர் தொடங்குவதற்கு முன்பு காஸாவின் மக்கள்தொகை சுமார் 2.3 மில்லியனாக இருந்தது.

குறிப்புச் சொற்கள்