இஸ்ரேல், ஹமாஸ் இடையே போர் நிறுத்த உடன்பாடு எட்டப்பட்டதை, பிணைக் கைதிகளின் குடும்பங்கள் வரவேற்று உள்ளன.
மகிழ்ச்சியும் வருத்தமும் சந்திக்கிற ஒரு நிகழ்வை வர்ணிக்க வார்த்தை இல்லை என்று எஃப்ராட் மச்சிக்காவா என்னும் பெண்மணி தெரிவித்து உள்ளார்.
அவரது உறவினரான காடி மோசஸ் என்பவரை ஹமாஸ் போராளிகள் 2023 அக்டோபர் 7ஆம் தேதி பிணைக் கைதியாகப் பிடித்து காஸாவுக்குக் கொண்டு சென்றனர்.
அமைதி விரும்பியும் வேளாண்மைத் துறை நிபுணருமான 80 வயது திரு மோசஸை தென் இஸ்ரேலில் இருந்து அவர்கள் கடத்திச் சென்றனர்.
தற்போது ஏற்பட்டுள்ள போர் நிறுத்த உடன்பாட்டின் விளைவாக அவர் விடுவிக்கப்படுவார் என்று திருவாட்டி எஃப்ராட் நம்பிக்கையுடன் உள்ளார்.
இருப்பினும் தமது நம்பிக்கை கட்டுப்பட்டதாக உள்ளது என்றார் அவர். பிணைக் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்படுவர் என்று உடன்பாட்டில் சொல்லப்பட்டு இருந்தாலும் அவர்களின் குடும்பத்தினர் இன்னும் எச்சரிக்கையுடனேயே உள்ளனர்.
தமது சித்தப்பாவான மோசஸ் எப்போது விடுவிக்கப்படுவார் என்று தமக்குத் தெரியவில்லை என்றார் அவர்.
அவர் நலமுடன் இருப்பார் என்று நம்புகிறேன். அவர் வீடு திரும்ப நாள்கள் ஆனாலும் அவரை உற்சாகத்துடன் வரவேற்று அரவணைப்போம் என்றும் திருவாட்டி எஃப்ராட் கூறினார்.

