வாஷிங்டன்: அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனின் மையப்பகுதியில் உள்ள ஒரு பொதுக் கோல்ஃப் மைதானத்தை அதிபர் டோனல்ட் டிரம்ப் தனிப்பட்ட முறையில் தமக்கு ஏற்றபடி மறுவடிவமைப்புச் செய்யத் திட்டமிட்டுள்ளார்.
உலகில் பல கோல்ஃப் மைதானங்களின் உரிமையாளரான அவர், ‘ஈஸ்ட் பொடோமெக் கோல்ஃப் லிங்க்ஸ்’ எனப்படும் அம்மைதானத்தைப் பெரிய அளவிலான போட்டிகளை ஏற்று நடத்தும் விதமாக மாற்றவேண்டும் என்ற எண்ணம் கொண்டார்.
அந்த மைதானம் பொதுமக்கள் கட்டுப்படியான கட்டணங்களைச் செலுத்திப் பயன்படுத்தும் ஒன்றாகும்.
அதன் மறுவடிவமைப்பின் அங்கமாக இதுவரை 500க்கும் மேற்பட்ட நல்ல மரங்கள் வெட்டி அகற்றப்பட்டுவிட்டன. அச்செயலை எதிர்த்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆர்வலர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.
அதனை விசாரித்த நீதிபதி, மரங்கள் வெட்டப்படுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று திங்கட்கிழமை (அக்டோபர் 26) உத்தரவிட்டுள்ளார்.
“சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அமைப்புடன் நீதிமன்றமும் இணைந்து, ஈஸ்ட் பொடோமெக் கோல்ஃப் லிங்க்ஸ் மைதானத்தில் மேலும் மரங்கள் வெட்டப்படுவதற்குத் தடை விதிக்கிறது. வழக்கின் முழுத் தீர்ப்பு எட்டப்படும் வரையில், மேலும் அந்த வளாகத்தில் மீட்க முடியாத வகையில் மேற்கொள்ளப்படும் எவ்வித மாற்றங்களையும் செய்வதற்கு 10 வர்த்தக நாள்களுக்கு முன்பாக எழுத்துப்பூர்வ ஒப்புதல் பெறவேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறது,” என்று வட்டார நீதிபதி அனா ரெயிஸ் 70 பக்கங்கள் உள்ளடங்கிய தீர்ப்பினை வழங்கினார்.
நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதை அறிந்தும் அந்த மரங்கள் அரசாங்கத்தால் அகற்றப்பட்டதாக அறியப்படுகிறது.
ஒரு வாரத்துக்கு முன்பாக அறிவிப்பு வழங்கப்படவேண்டும் என்று தெரிந்தும் அரசாங்கம் அந்நடவடிக்கையைத் தொடர்ந்து மேற்கொண்டது என நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டார். அந்த மரங்கள் எவ்வித ஆபத்தையும் விளைவிக்காத நல்ல மரங்கள் எனவும் அவர் விளக்கினார்.
1920ஆம் ஆண்டிலிருந்து பயன்பாட்டில் உள்ள அந்த மைதானத்தின் மறுவடிமைப்பை எதிர்த்து, உள்ளூர் கோல்ஃப் விளையாட்டாளர்கள் பலர் கருத்துரைத்துள்ளனர்.
