வாஷிங்டன்: அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு தொடர்பான முக்கிய ஆவணங்களைச் சட்டவிரோதமாக வைத்திருந்தது தொடர்பில் முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப் மீது தொடுக்கப்பட்ட வழக்கில், சாட்சிகளின் பட்டியலை ரகசியமாக வைத்துக்கொள்ளும்படி அரசாங்கம் முன்வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
ஃபுளோரிடாவைச் சேர்ந்த நீதிபதி ஐலீன் கேனன் அவ்வாறு தீர்ப்பு வழங்கினார்.
அந்த சாட்சிகளுடன் வழக்கைப் பற்றி கலந்துபேச திரு டிரம்பிற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சாட்சிப் பட்டியலில் மொத்தம் 84 பேர் இடம்பெற்றுள்ளனர். அவர்களில் சிலர் அல்லது அனைவருமே ஒரு கட்டத்தில் வெளிப்படுத்தப்படலாம் என்று கருதப்படுகிறது.
சாட்சிப் பட்டியல் பொதுமக்கள் பார்வைக்கு மறுக்கப்பட்டு ரகசியமாக வைக்கப்படவேண்டும் என்பதை நியாயப்படுத்துவதற்கான எந்த அடிப்படையையும் அரசாங்கம் முன்வைக்கவில்லை என்று நீதிபதி தமது தீர்ப்பில் குறிப்பிட்டார்.

