நியூயார்க்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், செப்டம்பர் 18 ஆம் தேதி சிஎன்என் (CNN), எம்எஸ் நவ் (MS NOW), பொலிட்டிக்கோ (Politico) ஆகிய ஊடக நிறுவனங்களுக்கான வெள்ளை மாளிகை அனுமதிக்குத் தடை விதித்திருந்தார்.
பாதிக்கப்பட்ட ஊடக நிறுவனங்கள் செப்டம்பர் 21 ஆம் தேதி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன. பத்திரிகை சுதந்திரத்தை அதிபர் மீறிவிட்டார் என்று அவை வாதிட்டன.
வழக்கினை விசாரித்த நீதிபதி கெல்லி, செய்தியாளர்களுக்கான அனுமதி அட்டைகளை உடனடியாகத் திருப்பிக் கொடுக்குமாறு உத்தரவிட்டார். மேலும், அடுத்த 14 நாள்களுக்கு இந்தத் தடையை நடைமுறைப்படுத்தக் கூடாது என்றும் அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.
மேலும், மூன்று ஊடக நிறுவனங்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை அமெரிக்கக் கூட்டாட்சி அரசியல் சாசனத்திற்கு முரணானது என்றும் நீதிபதி கூறினார்.
தடைக்குத் தேசியப் பாதுகாப்புதான் முக்கியக் காரணம் என்று அமெரிக்க நீதித்துறை வாதிட்டது. ஆனால், அந்த வாதத்திற்கு எவ்வித உண்மையான ஆதாரமும் இல்லை என்று கூறி நீதிபதி அதனை ஏற்க மறுத்துவிட்டார்.
ஊடகங்களின் செய்திகளில் உண்மை இல்லை என்றும், அவை பொய்களை வெளியிடுவதாகவும் திரு டிரம்ப் குற்றம் சாட்டியிருந்தார்.
பல்வேறு பத்திரிகை சுதந்திரக் குழுக்கள் பாதிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் வாதிட்டன.
நவம்பர் 3 ஆம் தேதி அமெரிக்காவில் இடைக்காலத் தேர்தல் நடக்கவுள்ளது. அதற்கு முன்னதாக அதிபர் டிரம்ப்பிற்கு இந்தத் தீர்ப்பு ஒரு மிகப்பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது.
